அமலாக்கத்துறையின் அடாவடித்தனத்தை வேடிக்கை பார்க்க முடியாது: டெல்லி நீதிமன்ற கடும் கண்டனம்!
அமலாக்கத்துறையின் அடாவடித்தனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் அமித் கத்யாலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை நீட்டிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.
மேதாந்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமித் கத்யாலின் உடல்நிலை தேறியிருப்பதாக தெரிகிறது. அவருக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. குற்றம் சாட்டப்பட்ட அவரின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறி, அவருக்கு இடைக்கால ஜாமீன் மறுத்த டெல்லி நீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்குள் சரணடையுமாறு அமித் கத்யாலுக்கு உத்தரவிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது இரண்டு மகள்கள் மீது அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அமித் கத்யாலின் மனுவை தள்ளுபடி செய்த போது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
“வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் பாடங்கள் இருந்தால், பெரிய தலைவர்கள், சட்டங்கள் மற்றும் ஏஜென்சிகள் பொதுவாக தாங்கள் பாதுகாப்பதாக பொதுமக்கள் நினைத்தால் உண்மை என்னவோ அதற்கு மாறாக இருக்கிறது. சாமானியர்களுக்கு எதிராகவே அவர்கள் இருக்கிறார்கள்.” என நீதிமன்றம் தெரிவித்தது.
கோவிஷீல்டு பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தனியார் மருத்துவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததற்காக அமலாக்க இயக்குனரகத்துக்கு கண்டனம் தெரிவித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னெ, அமலாக்கத்துறையின் அடாவடித்தனத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார்.
“பணமோசடி சட்டப்பிரிவை பயன்படுத்தி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. அமலாக்கத்துறை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல, அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது.” எனவும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
தொழிலதிபர் அமித் கத்யாலின் ஜாமீன் நீட்டிப்புக்கு எதிரான வழக்கில், பணமோசடி சட்டதின் கீழ், வழக்கில் எந்தவொரு தொடர்பும் இல்லாத தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.