திமுக முக்கிய பிரமுகர்களை சுத்து போடும் அமலாக்கத்துறை... கதிர் ஆனந்தை தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் சம்மன்.!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பி நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக தனது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு செம்மண் குவாரி வழங்கியதாகவும், இதன் மூலம் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை 17ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத இந்திய பணங்களும், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அன்று இரவே அமைச்சர் பொன்முடியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாலை 3 மணிவரை விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சொல்லி அனுப்பினர். இந்நிலையில், 4 மாதங்கள் கழித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக முக்கிய பிரமுகர்களை குறிவைத்து அமலாக்கத்துறை அடுத்தடுத்து சம்மன் அனுப்பியுள்ளது ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இது வரும் நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.