அடையாறு ஆனந்த பவன் உணவில் கரப்பான்பூச்சி... முறையிட்ட வாடிக்கையாளர்.. அலட்சியமாக பதிலளித்த நிர்வாகம்.!
கோவை அடையாறு ஆனந்த பவன் உணவகத்தில் வாங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி வீதியில் டைகர் என்டர்பிரைஸ் என்ற டெலி காலர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் சார்பில் காந்திபுரத்தில் உள்ள அடையாறு ஆனந்த பவன் (ஏ2பி) உணவகத்தில் 9 பார்சல் சாப்பாடு வாங்கப்பட்டுள்ளது.
உணவைப் பிரித்து உண்ணும் போது, அதில் கீரையில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதை பார்த்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரப்பான் பூச்சி உடன் இருந்த உணவை சாப்பிட்ட பெண்கள் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து நிறுவன ஊழியர்கள் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருப்பது குறித்து புகைப்படம் எடுத்து கொண்டு நேரில் சென்று அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.
அதற்கு இனிமேல் இது போன்று சம்பவம் நிகழாது என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மணிகண்டன் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மணிகண்டன் கூறியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் ஏ2பி உணவகம் மீது தொடர்ந்து புகாரில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.