தவறான பிக்பாஸ் ரசிகர்கள் கணிப்பு! டபுள் ஏவிக்ஷனில் நடந்த செம்ம ட்விஸ்ட்! வெளியேறிய இரண்டு பேர் இவர்கள் தான்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாளே 18 போட்டியாளர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர். இதை தொடர்ந்து, முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து முதல் வாரத்திலேயே எழுத்தாளர் பவா செல்லதுரையும் உடல் நல பிரச்சனை காரணமாக வெளியேறுவதாக அறிவித்தார்.
அடுத்தடுத்த வாரங்களில், போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்தபோது, அதிரடியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்ன பாரதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே நுழைந்தனர். வந்த ஒரு வாரத்தில் அன்ன பாரதி வெளியேறினார். கடந்த வாரம் கானா பாலா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியாகியுள்ளது.
தற்போது வரை உள்ளே வர உள்ள அந்த இரண்டு பழைய போட்டியாளர்கள் யார் என்பது குறித்து, எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த வாரம் நடந்த டபுள் ஏவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பு படி, இந்த வாரம் அக்ஷயா மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய இருவர் வெளியேற்றப்படலாம் என கூறினர். இதன் மூலம் மாயாவின் புல்லி கேங்கில் இருந்து முக்கிய போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இதன் பின்னர் மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, ரசிகர்களின் கணிப்பு தவறாகி போகி... எலிமினேஷனில் அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது. அதன்படி இந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்ற போட்டியாளர்கள் சேவ் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ள பழைய போட்டியாளர்கள் இருவர் யார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D