பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட் எண்ட்ரி.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாஸ் ஹீரோவை இயக்கப் போகும் அட்லீ..
இயக்குனர் அட்லீ தெலுங்கு திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Atlee
இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த அட்லி, தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்தார்.
இதை தொடர்ந்து பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. ஷாருக்கான் நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஜவான் மாறியது.
இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அட்லி மாறினார். மோஸ்ட் வாண்டட் டைரக்டராக மாறிய அட்லீ நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் மாறி உள்ளார்.
Director Atlee
இந்த சூழலில் அட்லீ அடுத்த யாரை வைத்து இயக்க போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மேலும் அவர் ஷாருக்கான் - விஜய் இருவரையும் வைத்து பிரம்மாண்ட பொருட் செலவில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இயக்குனர் அட்லீ தெலுங்கு திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூனை ஹீரோவாக வைத்து அட்லீ படம் இயக்க உள்ளாராம். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், தொடர்ந்து திரி விக்ரம், சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரின் படங்களில் நடிக்க உள்ளார்.
எனவே இந்த படங்களை முடித்த பிறகே அட்லீ இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளாராம். இதுவும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் அட்லீ தற்போது ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்கும் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.