இசையுலகின் இரட்டையர்கள்.. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்தது ஏன்?
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்களாக வலம் வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து எம்.எஸ்.வி மகள் லதா அளித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மெல்லிசை மன்னர்கள்
தமிழ் சினிமாவின் ‘மெல்லிசை மன்னர்கள்’ எனப் போற்றப்படுபவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இரட்டையர்கள் போல் வலம் வந்த இவர்கள், இருவரும் இணைந்து இசையமைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தங்களது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். பல நல்ல பாடல்களை கொடுத்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர். அவர்களின் பிரிவுக்கு ராமமூர்த்தி செய்த ஒரு செயல் தான் காரணம் என எம்.எஸ்.வியின் மகள் லதா மோகன் முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
சி.ஆர் சுப்புராமனிடம் உதவியாளார் பணி
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் ஆரம்பத்தில் சி.ஆர் சுப்புராமன் என்ற இசை அமைப்பாளரிடம் உதவியாளராக பணிபுரிந்தனர். சுப்புராமன் திடீரென இறந்து விட, அவர் ஒப்புக் கொண்ட படங்கள் பாதியிலேயே நின்றது. அந்தப் படங்களுக்கு அவரது சீடர்களாக இருந்து நாங்கள் இசையமைக்கிறோம் என்று கூறி விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைக்கத் தொடங்குகின்றனர். இந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறின. அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தனர்.
எம்.எஸ்.விக்கும் ராமமூர்த்திக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு
இந்த நிலையில் 1964 ஆம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுத்து முடித்த பின்னர் இயக்குனர் ஸ்ரீதர் ‘கலைக்கோயில்’ என்கிற படத்தை எடுக்க முடிவு செய்கிறார். படத்தின் கதையை கேட்ட எம்.எஸ்.வி படத்தை தான் தயாரிப்பதாக கூறுகிறார். படத் தயாரிப்பில் ஆர்வம் இல்லாத ராமமூர்த்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர் வெளியான ‘கலைக்கோயில்’ திரைப்படம் தோல்வியடைய, எம்.எஸ்.வி கடனில் சிக்கியுள்ளார். இதனால் எம்.எஸ்.வியிடம் இருந்து பிரிய ராமமூர்த்தி முயன்று வந்தார். இது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமமூர்த்திக்கும் எம்.எஸ்.விக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.எஸ்.வி மகள் லதா பேட்டி
கோபக்காரரான ராமமூர்த்தி எம்.எஸ்.வியின் சட்டையை பிடித்துள்ளார். இந்த சண்டை பெரிதான நிலையில் எம்.எஸ்.வி சம்பவம் குறித்து அவரது தாயாரிடம் கூறியிருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வியின் தாயார், “எனக்கு நீ ஒரு மகன் மட்டுமே் வேறு குழந்தைகள் இல்லை. இனி ராமமூர்த்தி உடன் சேர வேண்டாம். அவர் உன்னை ஏதாவது செய்து விட்டால் என்னால் தாங்க முடியாது. நீ கஷ்டப்பட்டாலும் தனியாகவே கஷ்டப்படு” என அறிவுரை கூறியுள்ளார். அதன் பின்னரே இருவரும் பிரிந்து விட்டதாக எம்.எஸ்.வி மனைவி கூறியதாக அவரது மகள் லதா மோகன் கூறியுள்ளார்.
முன்பே ஆரம்பித்த புகைச்சல்
அதற்கு முன்னதாகவே எம்.எஸ்.வி ராமமூர்த்தி இடையே சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டது. ‘சர்வசுந்தரம்’ படத்தில் “அவளுக்கென்ன அழகிய முகம்..” என்ற பாடலில் எம்.எஸ்.வி கோட் சூட்டுடன் பாடலை கண்டக்ட் செய்வது போல தோன்றுவார். இதைப் பார்த்த ராமமூர்த்திக்கு தாமும் தானே அந்த பாடலுக்கு இசையமைத்திருந்தோம். எம்.எஸ்.வி மட்டும் தனியாக திரையில் தோன்றினால் அவர் மட்டும் இசையமைத்ததாக அல்லவா ரசிகர்கள் நினைப்பார்கள் என்று மனம் வருந்தினார். தினமும் இது குறித்து பேசி ராமமூர்த்தியின் மனதில் சிலர் நஞ்சை விதைத்துள்ளனர். இதன் காரணமாக எம்.எஸ்.வி யிடம் தான் இனி தனியாக இசையமைத்துக் கொள்வதாக ராமமூர்த்தி கூறியதாக கூறப்படுகிறது.
30 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த எம்.எஸ்.வி-ராமமூர்த்தி
பிடிவாதக்காரரான ராமமூர்த்தி என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் என்று தெரிந்த எம்.எஸ்.வி ராமமூர்த்தியின் முடிவுக்கு சரி என சொல்லிவிட்டார். இந்த பிரிவு நீண்ட நாள் நீடிக்காது, எப்படியும் ராமமூர்த்தி விரைவில் திரும்பி வந்து விடுவார் என எம்.எஸ்.வி நினைத்தார். சிவாஜியின் ‘பணம்’ படத்தில் ராமமூர்த்தி முதன்முதலாக தனியாக இசையமைத்தார். எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கடைசியாக இசையமைத்தார். 1965-ல் பிரிந்த எம்.எஸ்.வியும், ராமமூர்த்தியும் அதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு ‘என்றோ வந்தான்’ திரைப்படத்திற்காக இணைந்து ஒன்றாக இசை அமைத்தனர்.
பிரிவுக்கான பிற காரணங்கள்
இசையமைப்பதில் நுட்பங்களை செய்வது, மாற்றங்களை புகுத்துவது தொடர்பாக எம்.எஸ்.வி-ராமமூர்த்தி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததும் அவர்கள் பிரிவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ராமமூர்த்தி பிடிவாதக்காரர், முன்கோபம் கொண்டவர், ஒரே இசை பாணியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற எண்ணப் போக்கு கொண்டவர் என்கிற பேச்சு பரவலாக இருந்தது. இதன் காரணமாக இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் அனைவரும் எம்.எஸ்.வியிடம் இனிமையுடன் பழகி காலத்திற்கு தகுந்தார் போல் புதுமையை புகுத்தி பாடல்களை வடிவமைத்துக் கொண்டனர். இது ராமமூர்த்தி மனதில் நாளடைவில் கோபத்தையும் கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்கியது. இந்த பிளவு நாளடைவில் பெரிய முரண்பாடுகளாக உருவாகி, நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்ததாக கூறப்படுகிறது.