டீ கொடுக்க வந்த பையன் கொடுத்த ஐடியா.. MSV அமைத்த சூப்பர் ஹிட் பாடல்
டீக்கடை பையன் கொடுத்த ஐடியாவால் எம்.எஸ் விஸ்வநாதன் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார். அந்த சுவாரஸ்ய கதை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இசைத்துறையில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையால் பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். அவர் இசையமைத்த பாடல்கள் 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் பலராலும் கேட்டு ரசிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சாகா வரம் பெற்ற பாடல்களை தமிழ் திரை ரசிகர்களுக்கு அளித்தவர் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. இப்பேர்ப்பட்ட சாதனை மனிதர் எளிமையாக இருந்ததற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறலாம்.
‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படம்
‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தின் பாடல் கம்போஸின் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு இசை அமைக்க எம்.எஸ் விஸ்வநாதனும், கண்ணதாசனும் ஸ்டுடியோவில் அமர்ந்து பாடல் எழுதத் தொடங்கினர். அப்போது கண்ணதாசன் “மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்.. உதய காலம் வரை உன்னத லீலைகளாம்..” என்று பாடல் வரிகளை எழுதத் தொடங்கினார். இந்த வரிகளுக்கு எம்.எஸ் விஸ்வநாதன் டியூன் அமைக்கத் தொடங்கினார். 8 டியூன்கள் வரை அமைத்தும் அவருக்கு எந்த டியூனும் திருப்திகரமாக அமையவில்லை.
டீக்கடை பையன் கொடுத்த ஐடியா
மதன மாளிகையில் என்று தொடங்கும் பொழுதே அந்த டியூன் அனைவரையும் கவரும் வகையில் அமைய வேண்டும் என எம்.எஸ்.வி நினைத்தார். அந்த எட்டு டியூன்களையும் கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் திரும்ப போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அவர்களுக்கு டீ கொடுப்பதற்காக வந்த பையன் ஒருவன், எம்.எஸ்.வியிடம், “மூன்றாவது டியூனையும், ஏழாவது டியூனையும் இணைத்து போட்டால் பாடல் சூப்பராக வரும்” என ஐடியா கொடுத்துள்ளார். ஆனால் கண்ணதாசனோ, “இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா? போடா” என்று சொல்லி அந்த பையனை அங்கிருந்து அனுப்பி உள்ளார்.
சூப்பர் ஹிட் பாடல் அமைத்த எம்.எஸ்.வி
அந்தப் பையனும் ஓரமாக சென்று நின்று விட்டான். அப்போது எம்.எஸ்.வி உடனடியாக ஒரு புதிய டியூனை இசையமைக்க, அது அனைவருக்கும் பிடித்துப் போனது. அப்போது அனைவரிடமும் அந்தப் பையன் சொன்னது போல் மூன்றாவது டியூனையும், ஏழாவது டியூனையும் இணைத்துத்தான் இந்த டியூனை போட்டேன். இது அனைவருக்கும் பிடித்துப் போய் உள்ளது. பிரமாதமாக வந்துள்ளது” எனக் கூற, அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். எம்.எஸ் விஸ்வநாதனின் இந்த வெற்றிக்கு காரணமே அவரிடம் இருந்த இந்த தனி குணம் தான்.
எம்.எஸ்.வியின் குணம்
பாடல் குறித்து யார் விமர்சனம் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வார். யார் ஐடியா கொடுத்தாலும் அதை முயன்று பார்ப்பார். விமர்சனம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பாரே தவிர, அதை செய்பவர்கள் யார் என பார்க்க மாட்டார். இதுவே அவருடைய தனிச்சிறப்பு. அவர் இத்தனை வெற்றி மனிதராக மாறியதற்கும் அவரின் இந்த குணமே காரணம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.