அப்பா நாள் முழுக்க அழுதாரு; வடிவேலு பற்றி முதன்முறையாக பேசிய விஜயகாந்த் மகன்!
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தைபற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Vijayakanth Son Shanmuga Pandian
நடிகர் விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள். அவரின் மூத்த மகன் பிரபாகரன் அரசியலில் பிசியாக உள்ள நிலையில், அவரது இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது படைத் தலைவன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படம் வருகிற மே 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சண்முகப் பாண்டியன், வடிவேலு பற்றி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
வடிவேலு பற்றி சண்முகப் பாண்டியன் சொன்னதென்ன?
வடிவேலு பற்றி சண்முக பாண்டியன் கூறியதாவது: “வடிவேலு சாருக்கு அப்பா நிறைய விஷயத்தில் உதவி செய்திருக்கிறார். அவரை ஒரு பெரிய ஆளாக ஆக்கி இருக்கிறார். அவர் மிகப்பெரிய அளவில் உயர்ந்ததற்கு அவரின் திறமையும் ஒரு காரணம் தான். அதனால் தான் அவர் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆனார். அப்போது அப்பாவை பத்தி அவர் பேசுனது தேவையில்லாத விஷயம். அந்த டைம்ல அப்பாவுக்கு கொஞ்சம் கவலை இருந்தது. ஆனால் போகப் போக அப்பா அதைப்பற்றி கண்டுக்கவே இல்ல.
சோகமா இருந்தா வடிவேலு காமெடி தான் பார்ப்பார்
அப்பா எப்போ சோகமா இருந்தாலும் வடிவேலு சார் காமெடி போட்டு தான் பாப்பாரு. என் படத்தில் கூட வடிவேலு சாரை நடிக்க வைக்க திட்டமிட்டோம். அப்பாவும் நல்லா இருக்கும்னு சொன்னார். ஆனால் அந்த கேரக்டருக்கு சற்று யங் ஆன கேரக்டர் தேவைப்பட்டதால் வடிவேலு சாரை அணுகவில்லை. வடிவேலு சார் பேசுனதை அப்பா பெருசா மனசுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. விடு அப்ப எதோ பேசிட்டான், இனிமேல் அதைப்பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை” என சண்முகப்பாண்டியன் கூறினார்.
ஒரு நாள் முழுக்க அழுத விஜயகாந்த்
விஜயகாந்துக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியமாம். அதுபற்றி பேசிய சண்முகப் பாண்டியன், “அப்பாவுக்கு நாய்கள் என்றால் ரொம்ப புடிக்கும். ஷூட்டிங் முடிச்சு எவ்வளவு டயர்டா வந்தாலும் வந்த உடனே நாய்களோடு விளையாடிவிட்டு தான் எங்களை பார்க்க வருவார். அவர் எங்களிடம் உள்ள எல்லா நாய்களுக்கும் ஜூலி, சீசர் ஆகிய இரண்டு பெயர்களை தான் வைப்பார். அவர் ரொம்ப செல்லமாக வளர்த்த நாய் ஜூலி தான். வல்லரசு பட ஷூட்டிங் சமயத்தில் ஜூலி இறந்த தகவல் தெரிந்ததும், ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு ரூமுக்குள் சென்று கதைவை முடிக்கொண்டார். அன்று ஒரு நாள் முழுக்க அந்த ரூமில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார்” என சண்முகப் பாண்டியன் தெரிவித்தார்.