- Home
- Cinema
- ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'மகாராஜா': ஆஸ்கர் நடிகருடன் நடிக்கத் துடிக்கும் விஜய் சேதுபதி; கைகூடுமா பட வாய்ப்பு?
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'மகாராஜா': ஆஸ்கர் நடிகருடன் நடிக்கத் துடிக்கும் விஜய் சேதுபதி; கைகூடுமா பட வாய்ப்பு?
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானஹே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மகாராஜா - விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் மறுஉருவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதன் 2-ம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும் நடிகர் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த பத்தா திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், மகாராஜா படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அருமையாக வந்திருக்கும் ‘மகாராஜா 2’ கதை
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, நித்திலன் ஒரு மிகச்சிறந்த இயக்குநர். அவர் சமீபத்தில் என்னிடம் மகாராஜா 2 திரைப்படத்தின் கதையைக் கூறினார். அது மிகவும் அருமையாக வந்திருக்கிறது. ‘மகாராஜா’ முதல் பாகம் வெளியாவதற்கு முன்பு சிலர் அதை முழுமையாக நம்பவில்லை; ஆனால் எனக்கு அந்தப் படத்தின் மீது தொடக்கத்திலிருந்தே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்தார்.
ஹாலிவுட் ரீமேக்கில் மேத்யூ மெக்கானஹே
தொடர்ந்து படத்தின் சர்வதேச ரீமேக் உரிமம் குறித்துப் பேசிய அவர், தயாரிப்பாளர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டு, மகாராஜா படத்தின் மறுஉருவாக்க உரிமையை ஹாலிவுட்டுக்கு விற்றுவிட்டதாகக் கூறினார். 'அங்கு முதன்மைக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்?' என்று நான் கேட்டபோது, பிரபல முன்னணி ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கானஹே நடிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். உடனே நான் தயாரிப்பாளரிடம் விளையாட்டாகவும் ஆசையுடனும், 'உங்களுக்கு நான் ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்துத் தருகிறேன்;
ஆனால் அந்த ஹாலிவுட் ரீமேக்கில் எனக்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தையாவது வாங்கித் தாருங்கள், நான் அங்கே செல்ல விரும்புகிறேன்' என்று கூறினேன். ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமே உண்டு. எனினும், என்னுடைய ஒரு திரைப்படம் இன்று ஹாலிவுட் வரை சென்றிருப்பதே எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உலக அளவில் திரையரங்குகளிலும் ஓடிடி தளத்திலும் பாராட்டுகளைக் குவித்த ஒரு தமிழ்த் திரைப்படம், ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரத்தின் நடிப்பில் மறுஉருவாக்கம் செய்யப்பட இருப்பது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

