2025-ம் ஆண்டு ஓவர் பில்டப்போடு ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆன டாப் 10 தமிழ் படங்கள்
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹிட்டான படங்களைவிட பிளாப் ஆன படங்கள் தான் அதிகம். அந்த வரிசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி பிளாப் ஆன டாப் 10 படங்கள் பற்றி பார்க்கலாம்.

Top 10 Tamil Flop Movies in 2025
2025-ம் ஆண்டு தமிழ் சினிமா ஒரு மோசமான சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வருடத்தில் முதல் 10 மாதங்களிலேயே 220க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இதில் எஞ்சியுள்ள 2 மாதங்களில் 50 படங்கள் வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக படங்கள் ரிலீஸ் ஆன ஆண்டு என்கிற சாதனையை கோலிவுட் படைக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி அதிக தோல்விப் படங்களை கொடுத்த ஆண்டு என்கிற மோசமான சாதனையை நோக்கியும் தமிழ் சினிமா நகர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல லாபம் தந்த படங்கள் வெறும் 12 தான். சொல்லப்போனால் 5 சதவீத படங்கள் தான் வெற்றியடைந்திருக்கின்றன. மீதமுள்ள 95 சதவீத படங்கள் திரையரங்குகளுக்கு நஷ்டத்தை தான் ஏற்படுத்தி இருக்கின்றன.
பொங்கல் பிளாப் படங்கள்
2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பாலா இயக்கிய வணங்கான், விஷ்ணு வர்தனின் நேசிப்பாயா மற்றும் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகின. இந்த படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தன. குறிப்பாக தன் பட புரமோஷனுக்கே வராத நடிகை நயன்தாரா, தன் நண்பன் விஷ்ணுவர்தனுக்காக நேசிப்பாயா படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டதால், அப்படத்திற்கு ஹைப் அதிகரித்தது. ஆனால் அப்படம் வந்த சுவடே தெரியாமல் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது.
தோல்வியை தழுவிய அஜித் படம்
ஜனவரி மாதம் உச்ச நட்சத்திரங்களின் படம் எதுவும் வெளியாகாததால், பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் விடாமுயற்சி படத்தை திரையரங்க உரிமையாளர்கள் மலைபோல் நம்பி இருந்தனர். ஆனால் அப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே வாஷ் அவுட் ஆனது. அப்படத்திற்கு 100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிப்ரவரியில் மிகப்பெரிய ஹைப்போடு ரிலீஸ் ஆன மற்றொரு திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். தனுஷ் இயக்கிய படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அப்படம் துளி அளவும் பூர்த்தி செய்யவில்லை.
சொதப்பிய ஜிவி பிரகாஷ், சந்தானம்
ஜிவி பிரகாஷின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கிங்ஸ்டன். அது அவரின் 25வது படம் என்பதால் விழுந்து விழுந்து புரமோஷன் செய்தார். தமிழில் அதிக விஎஃப் எக்ஸ் காட்சிகள் கொண்ட படம் என ஓவர் பில்டப் விடப்பட்டது. ஆனால் அப்படம் மந்தமான திரைக்கதையால், அட்டர் பிளாப் ஆனது. இதையடுத்து ஏப்ரல் மாதம் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திரைக்கு வந்தது. இது டிடி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இதற்கு ஓவர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டதால் தோல்வி அடைந்தது.
கமலுக்கு மிகப்பெரிய தோல்வி
2025-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படமும் இருந்தது. மணிரத்னம் டைரக்ஷன், கமலுடன் சிம்பு நடிக்கும் முதல் படம், ஏ.ஆர்.ரகுமான் இசை என எக்கச்சக்க எதிர்பார்ப்போடு கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது தக் லைஃப். ஆனால் படத்தின் சொதப்பலான திரைக்கதையால், ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே இப்படத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றத்தொடங்கினர். இதனால் ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆனது தக் லைஃப். 250 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி கூட வசூலிக்காமல் படுதோல்வியை சந்தித்தது.
பிளாப் லிஸ்ட்டில் இணைந்த தனுஷ் - கவின்
தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆன குபேரா திரைப்படத்திற்கு பான் இந்தியா அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. இப்படம் ஆந்திராவின் மிகப்பெரிய அளவில் வசூல் செய்ததால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் தந்தது. ஆனால் தமிழ்நாட்டில் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. அதேபோல் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கவின், தனது கிஸ் படம் மூலம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். அப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது.