ஆள விடுங்கடா சாமி... வார் 2 படம் பிளாப் ஆனதால் ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு..!
வார் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அப்படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

Jr NTR Upcoming Movie Shelved
ஜூனியர் NTR பாலிவுட்டில் அறிமுகமாகி 'வார் 2' படத்தில் நடித்தார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இந்த ஸ்பை திரில்லர் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. முதல் காட்சியிலிருந்தே கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூலிலும் சரிவை சந்தித்தது. தற்போது 12 நாட்களில் இந்தியாவில் ரூ.224 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.80 கோடி வரை வசூலித்ததாகத் தகவல். வெளிநாடுகளில் லாபகரமாக இருந்தாலும், மற்ற இடங்களில் இப்படம் தோல்வியடைந்துள்ளது. 'வார் 2' பிரேக் ஈவன் செய்ய ரூ.700 கோடி வசூல் செய்ய வேண்டும். அது சாத்தியமில்லை. எனவே இந்தப் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது.
டிராப் ஆகும் ஏஜென்ட் விக்ரம் படம்
'வார் 2' படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் நடிக்கவிருந்த 'ஏஜென்ட் விக்ரம்' படம் கைவிடப்பட்டுள்ளது. 'வார் 2'-க்குப் பிறகு, தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா, ஜூனியர் NTR-ஐ முன்னணி வேடத்தில் வைத்து ஸ்பை திரில்லர் படமான 'ஏஜென்ட் விக்ரம்'-ஐ தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் 'வார் 2'-ன் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியைப் பார்த்து, அவர் இந்தத் திட்டத்தைக் கைவிட்டுள்ளார். இது ஜூனியர் NTRக்கு தொடர்ச்சியான பின்னடைவாக அமைந்துள்ளது.
ஜூனியர் NTR-ன் அடுத்த படம்
இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் கோலோச்ச திட்டமிட்டிருந்தார் ஜூனியர் NTR. ஆனால், தற்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. அவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் அவரின் 'ஏஜென்ட் விக்ரம்' கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு தனிப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த யஷ் ராஜ் பிலிம்ஸின் பிளான் கைவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 'ஏஜென்ட் விக்ரம்' படத்திற்கான பணிகளும் தொடங்கியிருந்த நிலையில் 'வார் 2'-ன் தோல்விக்கு இந்தப் பணியை நிறுத்தி உள்ளதாக, பாலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பை யூனிவர்ஸ்
'வார் 2', படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் 325 கோடி ரூபாய். யஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யூனிவர்சின் அடுத்த படம் 'ஆல்ஃபா'. இதில் ஆலியா பட் மற்றும் சர்வாரி வாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தான் ஏஜென்ட் விக்ரம் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் வார் 2 தோல்வியால் அந்த முடிவை கைவிட்டுள்ளனர். இதன்மூலம் யஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யூனிவர்ஸில் இருந்து ஜூனியர் NTR வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.