- Home
- Cinema
- சூர்யாவின் அட்டர் பிளாப் படம் ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் ஆகிறது... அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அட்டர் பிளாப் படம் ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் ஆகிறது... அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Anjaan Re-release
பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது, கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக சினிமா துறையில் ஒரு புதிய டிரெண்டாக மாறி உள்ளது. முந்தைய காலங்களில் வெளியான திரைப்படங்கள் புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்தப் படங்கள் வெளியானபோது தியேட்டர் அனுபவத்தை தவறவிட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மாபெரும் வெற்றி பெற்ற படங்களும், தோல்வியடைந்த படங்களும் இதில் அடங்கும். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த ஒரு படம் மீண்டும் ரீ-ரிலீஸுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகும் அஞ்சான்
2014-ல் வெளியான சூர்யாவின் 'அஞ்சான்' திரைப்படம், பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தயாராகி வருகிறது. என். லிங்குசாமி எழுதி இயக்கிய இப்படம் வருகிற நவம்பர் 28ந் தேதியன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடித்த இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், தலீப் தாஹில், முரளி சர்மா, சூரி, சேத்தன் ஹன்ஸ்ராஜ், சஞ்சனா சிங், ஆசிப் பஸ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அஞ்சான் வசூல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் 'அஞ்சான்'. ஆனால், வெளியான முதல் நாளிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் சரிவைச் சந்தித்தது. ஐஎம்டிபி அறிக்கையின்படி, 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 75 கோடி ரூபாய். ஆனால், இப்படம் 83.55 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. தமிழ்நாடு - 41.05 கோடி, ஆந்திரா-நிஜாம் - 10.20 கோடி, கேரளா - 5.60 கோடி, கர்நாடகா - 5.40 கோடி, மற்ற இடங்களில் இருந்து 80 லட்சம், வெளிநாடுகளில் இருந்து 20.45 கோடி என 'அஞ்சான்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் உள்ளன.
கலக்குமா அஞ்சான்?
தியேட்டரில் அட்டர் பிளாப் ஆன படத்தை எதற்காக ரீ-ரிலீஸ் செய்கிறார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள். அப்படம் ரிலீஸ் ஆன போது ஓவர் பில்டப்போடு வெளியானதும் அதன் தோல்விக்கு ஒரு காரணம். 100 பாட்ஷாவுக்கு சமம் என்று லிங்குசாமி சொன்னது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அப்படத்தை ரீ-எடிட் செய்து வெளியிட உள்ளார்களாம். இந்த ரீ-எடிட் வெர்ஷன் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிற நம்பிக்கையில் உள்ளார் லிங்குசாமி. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.