'வேதாளம்' ரீமேக் கொடுத்த உற்சாகம்... மீண்டும் அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை கையில் எடுத்த சிரஞ்சீவி?
அஜித் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'வேதாளம்' படத்தின் ரீமேக் தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவி 'விஸ்வாசம்' படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேதாளம்'. இந்த படத்தில் தங்கை மீது பாசம் கொண்ட அண்ணன் கதாபாத்திரத்திலும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி இருந்தார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்த நிலையில், லட்சுமிமேனன் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனிரூத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இந்தப் படத்தின் ரீமேக்கில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார். 'போலோ சங்கர்' என பேரிடப்பட்டுள்ள இந்த படத்தில், சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், கதாநாயகியாக தமன்னாவும் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி வரும் 'போலோ ஷங்கர்' படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்திற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
ajith's viswasam
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, அஜித் நடித்த 2019ஆம் ஆண்டு வெளியான 'விஸ்வாசம்' படத்தின் ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது விரைவில் தெரியவரும்.