காதலர் தின ஸ்பெஷல் “ கோலிவுட்டால் இணைந்த காதல் ஜோடிகள் ஒரு பார்வை!
காதலர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

கோலிவுட் காதல் ஜோடிகள்
காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ந் தேதி கொண்டாடப்படும். காதலர்களுக்கு இடையே காதல் உணர்வை அதிகரிக்க செய்வதில் சினிமாவும் முக்கிய பங்காற்றி உள்ளது. அப்படி இருக்கும் சினிமாவின் வாயிலாகவே ஏராளமான காதல் ஜோடிகள் உருவாகி இருக்கிறார்கள். அப்படி சினிமாவில் ரீல் ஜோடிகளாக இருந்து, பின்னர் ரியல் ஜோடிகள் ஆன தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அஜித் - ஷாலினி
நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அமர்க்களம் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்படத்தை போல் இவர்கள் காதலும் சக்சஸ் ஆகி, இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சுந்தர் சி - குஷ்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வந்த குஷ்பு, இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சூர்யா - ஜோதிகா
கோலிவுட்டில் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது காதலிக்க தொடங்கினர். பின்னர் 2006ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆனது.
பாக்கியராஜ் - பூர்ணிமா
திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் பாக்கியராஜ். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராக, இசையமைப்பாளராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். இவர் தன்னுடன் நடித்த நடிகை பூர்ணிமாவையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்
சினேகா - பிரசன்னா
புன்னகை அரசி சினேகா கடந்த 2007ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்கிற திரைப்படத்தில் நடித்தபோது பிரசன்னா மீது காதல் வயப்பட்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். சுமார் 8 வருட காதலுக்கு பின்னர் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
ஆதி - நிக்கி கல்ராணி
மரகத நாணயம் படத்தில் ரீல் ஜோடியாக நடித்த ஆதியும், நிக்கி கல்ராணியும் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கினர். சில வருடங்கள் ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2022ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது.
சித்தார்த் - அதிதி ராவ்
பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் சித்தார்த். இவர் தெலுங்கு படத்தில் நடித்தபோது அதிதி ராவை காதலிக்க தொடங்கினார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது.
ஆர்யா - சாயிஷா
கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நடிகை சாயிஷாவை உருகி உருகி காதலித்து வந்த நடிகர் ஆர்யா. கடந்த 2019-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதையும் படியுங்கள்... காதலர் தின ஸ்பெஷல் : OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய காதல் படங்கள்