மெல்ல கூட்டு சேரும் தவெக -காங்கிரஸ்..! ஜனநாயகன் படத்துக்கு முழு ஆதரவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத நிலையில், அவருக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ஆதரவாக நீளும் காங்கிரஸ் கரம்
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கரம் கோர்த்துள்ளது. சென்சார் போர்டு கெடுபிடிகளுக்கு எதிராக விஜய் எடுத்துள்ள நிலப்பாட்டிற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்சார் போர்டு சர்ச்சை: பின்னணி என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை, தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் களம் இறங்கியிருப்பது, தவெக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு மெல்லிய அரசியல் இணக்கம் உருவாவதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
"படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு"
நாளை (ஜனவரி 9) வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு இன்னும் சான்றிதழ் வழங்காத நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு நாளை வரவிருப்பதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள மாணிக்கம் தாகூர், மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"சிபிஐ வரிசையில் தற்போது சென்சார் போர்டு"
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய அரசு தற்போது சென்சார் போர்டை ஒரு ஒடுக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வரிசையில் தற்போது சென்சார் போர்டும் சினிமா துறையைக் கட்டுப்படுத்தும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசியல் சாசனத்தின் 19(1)(a) பிரிவு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைத் திட்டமிட்டே மத்திய அரசு சிதைப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சித்தாந்தங்களைப் பரப்பும் படங்களுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, மாற்றுச் சிந்தனை கொண்ட கலைப் படைப்புகளை அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகத்திற்கு அழகல்ல"
கலையை அதிகாரத்தின் முன் மண்டியிட வைப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், திரைப்படங்களுக்கு அரசியல் ரீதியான அனுமதியை விட அரசியல் சாசனப் பாதுகாப்பே அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு காங்கிரஸ் தரப்பிலிருந்து கிடைத்துள்ள இந்த வெளிப்படையான ஆதரவு, வரும் காலங்களில் தவெக - காங்கிரஸ் இடையே ஒரு பலமான கூட்டணி அமைவதற்கான தொடக்கமாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

