முதலிடத்தில் சாய் அபயங்கர் பாட்டு; 2025-ல் அதிகம் கேட்கப்பட்ட டாப் 10 பாடல்கள் லிஸ்ட் இதோ
2025-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான பாடல்களில் அதிக கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

Top 10 Tamil Songs on 2025
இசை என்பது மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, மனிதர்கள் விரும்பிக் கேட்பது பாடல்கள் தான். தற்போது பாடல்களைக் கேட்பதற்கென்றே தனி செயலிகள் வந்துவிட்டன. ஓடிடி தளங்கள் போல் பாடல்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகமான செயலிகளில் முதன்மையானது ஸ்பாட்டிஃபை. அதில் ஏராளமான பாடல்கள் உள்ளன. அந்த செயலி இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட தமிழ் பாடல்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன், சாய் அபயங்கர் ஆகியோரின் பாடல்கள் இடம்பெற்று உள்ளன.
10வது இடத்தில் தக் லைஃப் பாடல்
இந்த பட்டியலில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா பாடல் தான் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த பாடல் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பாடலை 1.33 கோடி பேர் கேட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 8 மற்றும் 9வது இடங்களை குட் பேட் அக்லி பட பாடல்கள் தான் பிடித்துள்ளன. அந்த வகையில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான காட் பிளெஸ் யு பாடல் 9வது இடத்திலும், ஓஜி சம்பவம் பாடல் 8வது இடத்திலும் உள்ளது. இதில் காட் பிளெஸ் யு பாடல் 1.42 கோடி முறை ஸ்ட்ரீம் ஆகி இருக்கிறது. அதேபோல் ஓஜி சம்பவம் பாடல் 1.56 கோடி ஸ்ட்ரீமிங் கவுண்ட் பெற்றுள்ளது.
3 இடங்களை தட்டிதூக்கிய டிராகன்
அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டிராகன் திரைப்படம் பாடல்கள் இந்த பட்டியலில் 3 இடங்களை பிடித்துள்ளன. அதில் ஏண்டி விட்டு போன என்கிற பாடல் 1.66 கோடி ஸ்ட்ரீமிங் கவுண்ட் உடன் 7வது இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக ரைஸ் ஆஃப் டிராகன் பாடலும் 1.90 கோடி முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டு 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இதுதவிர வழித்துணையே பாடல் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படலை 3.24 கோடி முறை ஸ்ட்ரீம் செய்துள்ளார்களாம். இந்த பாடல்களுக்கெல்லாம் இசையமைத்தது இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தான்.
டாப் 3ல் ரெட்ரோ பாடல்கள்
இந்த டாப் 10 பட்டியலில் அனிருத்தின் ஒரே ஒரு பாடல் தான் இடம்பெற்று உள்ளது. அதன்படி அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன விடாமுயற்சி படத்திற்காக அனிருத் இசையமைத்த பத்திக்கிச்சு என்கிற பாடல் தான் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படாலை ஸ்பாட்டிஃபையில் மொத்தம் 2.65 கோடி முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்கள் தான் 2 மற்றும் 3ம் இடத்தை ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த கன்னிமா பாடல் 3.24 கோடி ஸ்ட்ரீமிங் உடன் 3ம் இடத்தையும், கண்ணாடி பூவே பாடல் 3.36 கோடி ஸ்ட்ரீமிங் உடன் 2ம் இடத்தையும் பிடித்துள்ளது.
முதலிடத்தில் சாய் அபயங்கர் பாட்டு
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது சாய் அபயங்கரின் சுயாதீன இசைப்பாடலான சித்திர புத்திரி பாடல் தான். இப்பாடலை 6 மாதங்களில் 3.45 கோடி முறை ஸ்ட்ரீமிங் செய்துள்ளார்களாம். கடந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் சாய் அபயங்கரின் கட்சி சேரா பாடல் தான் முதலிடம் பிடித்திருந்தது. அதேபோல் இந்த வருடமும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் சாய், அனிருத், ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களை முந்தி முதல் இடம் பிடித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் தற்போது பிசியான இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். அவர் கைவசம் தற்போது அரை டஜன் தமிழ் படங்கள் உள்ளன.