கோடையில் மழை வரவைத்த இளையராஜா பாடல் பற்றி தெரியுமா? இசைஞானி செய்த மேஜிக் என்ன?
இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடலால் கோடையில் மழை பெய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அது எப்படி நிகழ்ந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

Secret Behind Ilaiyaraaja Song
இளையராஜா என்று சொன்னதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இசை தான். அன்னக்கிளியில் தொடங்கிய அவரது இசைப் பயணம் 50 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. இந்த 50 வருட காலகட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார் இளையராஜா. இன்றைய காலகட்டத்தில் ஒரு இசையமைப்பாளர் ஒரு வருடத்தில் 5 படங்களுக்கு இசையமைத்தாலே அபூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் 1980களில் இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவர் ஓராண்டுக்கு 50 படங்களுக்கு இசையமைப்பாராம். அந்த சாதனையை எவராலும் இன்று வரை வீழ்த்த முடியவில்லை.
இளையராஜா பாடல் ரகசியம்
இளையராஜாவின் பாடல்கள் காலம் கடந்தும் கொண்டாடப்படுவதற்கு அதன் ஆத்மார்த்தமான இசை தான் காரணம். இளையராஜா பாடலால் நிகழ்ந்த பல சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றன. உதாரணத்திற்கு இளையராஜாவின் பாடல் கேட்க யானைக் கூட்டம் ஒன்று தினசரி தியேட்டருக்கு வந்த சம்பவம் அரங்கேறியது பற்றி அனைவரும் அறிந்திருப்போம். வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற ‘ராசாத்தி உன்ன’ பாடலை கேட்க தான் அந்த யானைக் கூட்டம் வந்திருந்ததாம். அதுபோன்ற ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பிலும் பார்க்க உள்ளோம்.
மழை வர வைத்த இளையராஜா பாட்டு
அது என்னவென்றால் இளையராஜாவின் பாடலால் கோடையில் மழை வெளுத்து வாங்கிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. இளையராஜா அமிர்தவர்ஷினி என்கிற ராகத்தை அடிப்படையாக கொண்டு பாடல் ஒன்றை பதிவு செய்தாராம். அமிர்த வர்ஷினி ராகத்தை முறையாக பாடினால் மழை வரவைக்க முடியுமாம். அப்பாடலைப் பாட ஜேசுதாஸ் மற்றும் ஜானகி ஆகியோர் வந்திருக்கிறார்கள். அப்பாடல் அமிர்தவர்ஷினி ராகத்தில் இருப்பதை பார்த்த அவர்கள், மழை வரவில்லை என்றால் எங்களைத் திட்டாதீர்கள் என்று சொல்லி ராஜாவை கேலி செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் பாடலால் நடந்த மேஜிக்
அப்பாடல் பதிவு முடிந்து இளையராஜாவின் ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்து பார்த்த ஜானகிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் கோடையில் அதுவும் மதிய வேளையில், யாருமே வீட்டிற்கு செல்ல முடியாத அளவிற்கு கன மழை கொட்டித் தீர்த்ததாம். இந்த தகவலை பாடகி ஜானகியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அப்படி மழை வரவைத்த பாடல் வேறெதுவுமில்லை... அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற ‘தூங்காத விழிகள் ரெண்டு’ என்கிற பாட்டு தான் அது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். இதில் பிரபு, கார்த்திக் ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர்.