- Home
- Cinema
- வசூலில் புதுப்படங்களை ஓட ஓட விரட்டிய விஜய்யின் குஷி... ரீ-ரிலீஸிலும் வசூல் ராஜாவாக ஜொலிக்கும் தளபதி
வசூலில் புதுப்படங்களை ஓட ஓட விரட்டிய விஜய்யின் குஷி... ரீ-ரிலீஸிலும் வசூல் ராஜாவாக ஜொலிக்கும் தளபதி
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த குஷி திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kushi Re Release Box Office
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் குஷியும் ஒன்று. கடந்த 2000-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். அஜித்தை வைத்து வாலி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. காதலர்களுக்கு இடையேயான ஈகோ மோதலை மையமாக வைத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படம் அன்றைய காலகட்டத்தில் சக்கைப் போடு போட்டது. நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் குஷி அமைந்தது.
குஷி ரீ-ரிலீஸ்
குஷி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு அதன் பாடல்களும் முக்கிய காரணம். தேவா இசையில் ‘மேகம் கருக்குது’ பாடல் அன்று பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டது. அதேபோல் மும்தாஜ் உடன் சேர்ந்து விஜய் ஆடும் கிளுகிளுப்பான ‘கட்டிப்புடிடா’ பாடலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இதுதவிர ‘ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்’, ‘மேக்கரீனா’, ‘மொட்டு ஒன்று மலர்ந்திட’ என அனைத்து பாடல்களுமே சார்ட்பஸ்டர் ஹிட் அடித்தன. இன்றளவும் அப்பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. குஷி திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரித்து இருந்தார்.
செம ரெஸ்பான்ஸ்
குஷி திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர். கடந்த ஆண்டு விஜய் நடித்த கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அதேபோல் குஷி படத்தையும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்து கடந்த செப்டம்பர் 25-ந் தேதி குஷி திரைப்படம் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆனது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், குஷி திரைப்படத்திற்கு அது சாதகமாகிப் போனது. இப்படத்திற்கும் தியேட்டர்களில் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
வசூல் நிலவரம்
இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் 66 லட்சமும், இரண்டாம் நாள் 49 லட்சமும், மூன்றாம் நாள் 61.63 லட்சமும் வசூலித்திருந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை ரூ.60.57 லட்சம் வசூலித்திருந்தது. இதன் மூலம் நான்கு நாட்களில் குஷி திரைப்படம் 2.3 கோடி வசூலித்துள்ளது. இதற்கு போட்டியாக திரையரங்குகளில் ஓடி வரும் புதுப் படங்களான சக்தித் திருமகன் கடந்த நான்கு நாட்களில் வெறும் 1.6 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. அதேபோல் தியேட்டர்களில் ஓடி வரும் மற்றொரு புதுப்படமான கவின் நடித்த கிஸ் திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் வெறும் 66 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.