நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றான குஷி ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் டிரெய்லரை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டு உள்ளார்.

Kushi Re Release Trailer : தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் கடந்த ஆண்டு உருவானது. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் தொடர்ச்சியாக சொதப்பிய நிலையில், துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை சரிவில் இருந்து மீட்டது நடிகர் விஜய்யின் கில்லி படம் தான். அப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. அப்படம் ரிலீஸ் ஆன போது கிடைத்த வசூலைவிட இது அதிகமாகும்.

கில்லி படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம், அதன் ரீ-ரிலீஸுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பால் குஷியாகி மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கினார். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தயாரித்து வருகிறார். சொல்லப்போனால் கில்லி ரீ-ரிலீஸ் மூலம் கிடைத்த லாபத்தில் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படம் உருவாகிறதாம். கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தான் விஜய்யை வைத்து தயாரித்த மற்றொரு படமான குஷியையும் தற்போது ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் ஏ.எம்.ரத்னம்.

குஷி ரீ-ரிலீஸ்

அதன்படி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட படம் குஷி. அப்படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதனை வருகிற செப்டம்பர் 25-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன், ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல் குஷி படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குஷி பட ரீ-ரிலீஸுக்காக ஸ்பெஷல் டிரெய்லர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அவரின் வாய்ஸ் ஓவர் உடன் வெளியாகி இருக்கும் இந்த டிரெய்லரில் விஜய்யை முதலில் தளபதி என குறிப்பிட்டு, பின்னர் இளைய தளபதி என மாற்றி இருக்கிறார்கள். அனைத்து பாடல்களுடன் செம Vibe ஆக இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. இந்த டிரய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.