கேசரி தான்... கேசரியே தான்..! ஜனநாயகன் ட்ரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இது பகவந்த் கேசரி ரீமேக் தான் என்கிற விவாதம் மீண்டும் எழத் தொடங்கி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Jana Nayagan vs Bhagavanth kesari Similarities
நடிகர் விஜய்யின் 69-வது படம் ஜனநாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும், இயக்குனர் எச்.வினோத் அதை ஏற்க மறுத்தார். இது தளபதி படம் என அவர் கூறி இருந்தார். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரில் பகவந்த் கேசரி படத்தோடு ஒத்துப்போகும் காட்சிகள் சில இடம்பெற்று உள்ளன. தெலுங்கில் பாலகிருஷ்ணா, ஸ்ரீ லீலாவுக்கு பாக்ஸிங் பயிற்சி கொடுக்கும் காட்சியை அப்படியே இதில் விஜய் - மமிதா பைஜுவை வைத்து எடுத்திருக்கிறார்கள்.
ஒரே சீன்
பகவந்த் கேசரியில் ஸ்ரீலீலாவை ஆர்மியில் சேர்த்து விட வேண்டும் என்கிற முனைப்போடு பாலய்யா இருப்பார். அவரிடம் தனக்கு ஆர்மியெல்லாம் வேண்டாம் என ஸ்ரீலீலா சொல்வார். அதே காட்சி ஜனநாயகன் ட்ரெய்லரிலும் காண முடிகிறது. எனக்கு இந்த ஆர்மியெல்லாம் வேண்டாம், பாரு என் கையெல்லாம் எப்படி நடுங்குதுனு என விஜய்யிடம், மமிதா பேசும் டயலாக் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியும் இரண்டு படங்களுக்கும் ஒத்துப் போகிறது.
ஆக்ஷன் காட்சியும் காப்பியா?
பகவந்த் கேசரி படத்தில் ஒரு கம்பெனியில் வைத்து செம மாஸான ஆக்ஷன் காட்சி இடம்பெற்று இருக்கும். அதில் பாலய்யா லாரியில் பறந்து வந்து மாஸ் எண்ட்ரி கொடுப்பார். அதை தமிழில் அப்படியே எடுத்தால் ட்ரோல் செய்வார்கள் என்பதால், அதில் சற்று மசாலாவை குறைத்து விஜய் ஜீப்பில் எண்ட்ரி கொடுத்து, அங்குள்ள ரெளடிகளிடம் என் பொண்ணை தொட சொன்னவன் யாரு என கேட்டு, ரெளடிகளை அடிச்சு துவம்சம் செய்யும் காட்சி ஜனநாயகன் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியும் இரண்டு படங்களுக்கும் காமனாக உள்ளது.
ரீமேக்கா? இல்லையா?
இப்படி ட்ரெய்லரிலேயே காட்சிகள் ஒத்துப்போனாலும் இது முழுக்க முழுக்க பகவந்த் கேசரி ரீமேக் ஆக இருக்கவும் வாய்ப்பில்லை என்கிற பேச்சும் அடிபடுகிறது. பகவந்த் கேசரி படத்தில் உள்ள சில காட்சிகளை மட்டும் பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்றார் போல் மாற்றி இருப்பதாகவும், மீதமுள்ள 50 சதவீத படம் ஃபிரெஷ் ஆனது என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ படம் ரிலீஸ் ஆனால் இது ரீமேக்கா இல்லையா என்பது தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.

