முன்பதிவிலேயே காத்துவாங்கும் விஜய்யின் குஷி... கில்லி சாதனையை முறியடிக்குமா?
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்யும், ஜோதிகாவும் நடித்த குஷி திரைப்படம் நாளை ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் முன்பதிவு நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kushi Re-Release
தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக லாபம் ஈட்டியவற்றில் விஜய் படங்கள் முக்கியமானவை. குறிப்பாக 'கில்லி'. தரணி இயக்கத்தில் 2004-ல் வெளியான இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஏ.எம். ரத்னம் தயாரித்த படம் இது. கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. இப்போது, அதே தயாரிப்பாளரின் மற்றொரு படம் ரீ-ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதுவும் ஒரு விஜய் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷி ரீ-ரிலீஸ்
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் 2000-ல் வெளியான ரொமான்டிக் காமெடி படமான 'குஷி' மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது. இப்படம் நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரீ-ரிலீஸில் மாபெரும் வெற்றி பெற்ற 'கில்லி' படத்தையும் இதே குழுதான் விநியோகித்தது. ரீ-ரிலீஸ் படங்களில் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் ஈட்டித் தந்த படங்களில் ஒன்றாக 'கில்லி' மாறியது. படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'குஷி' மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
25 ஆண்டுகள் நிறைவடையும் குஷி
சிவா, ஜென்னி என்ற கல்லூரி மாணவர்களாக விஜய் மற்றும் ஜோதிகா 'குஷி' படத்தில் நடித்திருந்தனர். இவர்களின் லவ்-ஹேட் உறவு இறுதியில் காதலில் முடிவடைகிறது. 2000-களில் வெளியான சிறந்த ரொமான்டிக் காமெடி படங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தேவா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, மும்தாஜ், நிழல்கள் ரவி, பீனா பானர்ஜி, ஜானகி சபேஷ், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணா சிங், ராஜன் பி தேவ், ஜெய முரளி, வசந்த் ரவி, மணீஷ் போருண்டியா, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீதர், ஷோபி, ஜப்பான் குமார், ஷ்யாம், ரவி மரியா ஆகியோர் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குஷி ரீ-ரிலீஸ் டிக்கெட் புக்கிங்
ஜீவா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பி. லெனின் மற்றும் வி.டி. விஜயன் எடிட்டிங் செய்துள்ளனர். ரீ-ரிலீஸில் 'கில்லி' பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை 'குஷி'யும் பெறுமா என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் உள்ளனர். ஆனால் படத்தின் டிக்கெட் புக்கிங் மந்தமாகவே உள்ளது. குஷி படத்தின் ரீ-ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படம் முன்பதிவு மூலம் தற்போது வரை ரூ.44 லட்சத்து 67 ஆயிரம் மட்டுமே வசூலித்து இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் காந்தாரா 2, இட்லி கடை என இரண்டு பிரம்மாண்ட படங்கள் வருவதால், கில்லி மேஜிக்கை குஷி நிகழ்த்த வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.