Etharkkum Thunindhavan review : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாஸா? பெயிலா? - முழு விமர்சனம் இதோ
Etharkkum Thunindhavan Review: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி நடிப்பில் வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் விமர்சனம்.
நாயகன் சூர்யா, தென்னாடு பகுதியில் வக்கீலாக இருக்கிறார். பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன், ஃப்ரெண்ட்லியான அப்பா சத்யராஜ் என அனைவரும் ஜாலியாக இருக்கின்றனர். அதேபோல் வடநாடு பகுதியை சேர்ந்த வில்லன் வினய், செல்வாக்கும் மிக்கவராக இருக்கிறார். தென்னாடு மற்றும் வடநாடு ஊர்காரர்களிடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.
சூர்யா வசிக்கும் தென்னாட்டில் இளம் பெண்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். சில தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நடிகர் சூர்யா தீவிரம் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் இந்த கொலை சம்பவங்களுக்கு பின்னணியில் நடிகர் வினய் இருப்பதையும், அவர் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதையும் கண்டுபிடிக்கிறார் சூர்யா.
சூர்யாவுக்கு விஷயம் தெரிந்ததை அறியும் வினய், தன் வசம் உள்ள இளம் பெண்களின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். அதனை நாயகன் சூர்யா எப்படி தடுத்தார்? வில்லன் வினய்க்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுத்தாரா சூர்யா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சூர்யா, கண்ணபிரான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், டான்ஸ் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக படம் முழுக்க ஜொலிக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அதகளப்படுத்தி இருக்கிறார்.
சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி பிரியங்கா மோகன், ஆரம்பத்தில் வெகுளியாகவும், திருமணத்துக்கு பின் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி அசர வைக்கிறார். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதேபோல் திவ்யா துரைசாமியும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லன் வினய், ஸ்டைலிஷ் வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார். சூர்யாவின் தந்தையாக வரும் சத்யராஜ், ஃபிரெண்ட்லியான அப்பாவாக வந்து தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் பாசக்கார அம்மாவாக வந்து நடிப்பில் மிளிர்கிறார். சூரி, தேவதர்ஷினி, புகழ் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் சிரிப்புக்கு கேரண்டி கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
குடும்ப செண்டிமெண்ட் படங்களை இயக்குவதில் தான் ஒரு கில்லாடி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். மேலும் இதில் பெண்களின் பாதுகாப்பு பற்றி ஒரு முக்கியமான மெசேஜையும் கூறி இருப்பது அருமை. படத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் இருந்தாலும் அவர்களை திறம்பட கையாண்டு உள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. பாடல்களை குறைத்து இருக்கலாம்.
டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருந்தாலும், பாடல்கள் மனதில் பதியாமல் இருப்பது சற்று பின்னடைவு. ரதனவேலுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது ராம் லக்ஷ்மன் அமைத்த சண்டைக் காட்சிகள் தான். குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் சண்டைக் காட்சி வேறலெவல். மொத்தத்தில் எதற்கும் துணிந்தவன் மூலம் துணிந்து அடித்திருக்கிறார் சூர்யா.
இதையும் படியுங்கள்... Thalapathy 66 Update : தளபதி 66 படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு... விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்