ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் சுதா கொங்கரா? ஹீரோ இவர்கள் இருவரின் ஒருவர் தான்! கசிந்தது தகவல்.
தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும், பெண் இயக்குனரான சுதா கொங்கரா அடுத்ததாக, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம்... விசாகப்பட்டினத்தில் பிறந்த சுதா கொங்கரா, அங்கே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் நாகர்கோயிலில் உள்ள மகளிர் கிருத்துவக் கல்லூரியில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே திரைப்படங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, கடந்த 2002 ஆம் ஆண்டு ஆங்கிலப் படமான 'மித்ர், மை ஃபிரண்ட்' படத்தின் மூலம் கதாசிரியராக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் சுதா கொங்கரா.
இதை தொடர்ந்து ஒரு இயக்குனராக மாற வேண்டும் என்கிற ஆசையோடு... பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் சுமார் 7 ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றினார். இதன் பின்னர், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து இவர் இயக்கிய 'துரோகி' திரைப்படம் கடந்த 2010 ஆண்டுவெளியானது . இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க 6 ஆண்டுகள் எடுத்து கொண்டார்.
வலுவான கதையை, முன்னணி ஹீரோவை வைத்து இயக்க வேண்டும் என முடிவு செய்த சுதா கொங்கரா... பாக்சிங் கதையை மையமாக வைத்து, நிஜ பாக்சரான ரித்திகா சிங்கை கதாநாயகியாகவும், மாதவனை ஹீரோவாகவும் வைத்து இயக்கிய 'இறுதி சுற்று' திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து தெலுங்கில் குரு, அந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை போன்ற படங்களை இயக்கிய இவர், நடிகர் சூர்யாவை வைத்து... பிரபல விமான நிறுவன தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த சூரரை போற்று திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, பல்வேறு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தது.
தற்போது சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சுதா கொங்கரா கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில், அக்ஷய் குமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்து வருகிறார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூரியாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறை தான் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன. அபிஷேக் பச்சன் ஏற்கனவே அம்பானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளதால், இந்த படத்திலும் அவர் நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்திற்கான முழு ஆய்வு பணிகளில் சுதா இறங்கி உள்ளதாகவும், முழு கதையும் தயார் செய்த பின்னர், இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல்களை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ரத்தன் டாட்டா வாழ்க்கை படமாக எடுத்தால்... எந்த நடிகர் பொருத்தமாக இருப்பர் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிவியுங்கள்.