மயிலை மறக்க முடியுமா... வியக்க வைக்கும் நடிகை ஸ்ரீதேவியின் ஹிட் லிஸ்ட் ஒரு பார்வை
நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் பற்றியும் அவரது திரையுலக பயணம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு என்றும் தனி இடம் உண்டு. தமது அசாத்திய நடிப்பாலும், நளினமான நடனத்தாலும், ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஸ்ரீதேவி. தமது 4-வது வயதில் 1969-ம் ஆண்டு தமிழில் வெளியான துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதில் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி.
1976-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ஸ்ரீதேவி. இதையடுத்து பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் மயிலு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் ஸ்ரீதேவி. தொடர்ந்து 1982-ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் மூன்றாம் பிறை என்கிற திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக உருவெடுத்தார்.
இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி பிறந்தநாள்... மக்களின் மனம் கவர்ந்த மயிலுக்கு மகுடம் சூட்டிய கூகுள்... சிறப்பு டூடுள் வெளியீடு
இதனையடுத்து வாழ்வே மாயம், ஜானி, சிகப்பு ரோஜாக்கள், ப்ரியா உள்பட ஏராளமான படங்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உடன் நடித்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய ஸ்ரீதேவி, கவரிமான் என்கிற திரைப்படத்தில் சிவாஜியின் மகளாவும், சந்திப்பு என்கிற படத்தில் அதே சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்து அசர வைத்தார். இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு பிற மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, பாலிவுட் திரையுலகின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பெருமையையும் பெற்றார்.
சாந்தினி, சத்மா, லம்ஹே, இங்கிலீஷ் விங்கிலீஷ், மாம் உள்பட அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. இப்படிப்பட்ட திறமை வாய்ந்த நடிகைக்கு பிலிம்பேர் உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்திருந்தாலும், தேசிய விருதை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருந்தது. அவரின் அந்தக் கனவி அவரின் கடைசி படத்தின் மூலம் தான் நிறைவேறியது. அவர் மாம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். ஆனால் அந்த விருதை பெறும் முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.
அசாத்திய நடிப்பையும் மிஞ்சி, திரைப்படங்களில் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ஸ்ரீதேவியை, அவ்வளவு எளிதில் திரையுலகம் மறந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை. மறைந்தாலும் மக்கள் மனதில் சிறந்த நடிகையாக என்றென்றும் நிலைத்து நிற்கும் ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... மனம் பதறுகிறது... அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா! நாங்குநேரி சம்பவத்தால் ராஜ்கிரண் ஆதங்கம்