Asianet News TamilAsianet News Tamil

மனம் பதறுகிறது... அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா! நாங்குநேரி சம்பவத்தால் ராஜ்கிரண் ஆதங்கம்

நாங்குநேரியில் சாதிவெறி பிடித்த சிலர் பட்டியலின மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Actor Rajkiran condemns Caste issue in Nanguneri
Author
First Published Aug 13, 2023, 8:39 AM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த மாணவனுக்கு அங்குள்ள சில சாதிவெறி பிடித்தவர்கள் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அந்த பட்டியலின மாணவன் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். பின்னர் ஒருநாள் இரவில் வீட்டில் தங்கையுடன், தனியாக படித்துக் கொண்டிருந்த பட்டியலின மாணவனின் வீட்டில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், அம்மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதை தடுக்க சென்ற அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதையடுத்து அந்த மாணவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பியோடிய மாணவர்கள் 3 பேர் மற்றும் அவருக்கு உதவியவர்கள் என இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஜிவி பிரகாஷ், மாரி செல்வராஜ் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் ராஜ்கிரணும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம் - இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் மோகன் ஜி கடும் கண்டனம்!

rajkiran

அந்த பதிவில் “நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.

எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது” என நாங்குநேரி அவலம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ராஜ்கிரண்.

இதையும் படியுங்கள்... சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்... நாங்குநேரி சம்பவத்தால் கொந்தளித்த ஜிவி பிரகாஷ்

Follow Us:
Download App:
  • android
  • ios