நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம் - இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் மோகன் ஜி கடும் கண்டனம்!
நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய சம்பவம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வரும் மாணவர், சக மாணவர்கள் சிலரால் ஜாதிய அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனால் மனமுடைந்து வீட்டில் தங்கிய அந்த மாணவன், இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில், அவருடைய பெற்றோர் நேராக பள்ளி நிர்வாகத்திடம் சென்று புகார் அளித்த நிலையில், சாதி ரீதியாக தாக்கப்பட்ட அந்த மாணவரை துன்புறுத்திய மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறு பள்ளி மாணவர்கள் அரிவாளுடன் நேரடியாக அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று, அவரை சரமாரியாக வெட்டியதோடு, அதை தடுக்க முயன்ற அவருடைய தங்கையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். தற்பொழுது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் தற்பொழுது காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார் "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல இந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள பிரபல இயக்குனர் மோகன் அவர்கள்.. "மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டி கொள்கிறேன்.. இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நாங்குநேரி சம்பவம்.. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு ஊடுருவி உள்ளது - முதல்வர் ஸ்டாலின் வருத்தம்!