ஸ்ரீதேவி பிறந்தநாள்... மக்களின் மனம் கவர்ந்த மயிலுக்கு மகுடம் சூட்டிய கூகுள்... சிறப்பு டூடுள் வெளியீடு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளுக்காக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டு கவுரவித்து உள்ளது.
sridevi
ஹீரோக்களின் ஆதிக்கம் மிகுந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்து நடிகைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இன்று லேடி சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் நயன்தாரா, மஞ்சு வாரியர் ஆகியோருக்கு ரோல் மாடல் ஸ்ரீதேவி தான். அந்த அளவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஸ்ரீதேவி.
300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு குஷி, ஜான்வி என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி 2000-ம் ஆண்டு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்த ஸ்ரீதேவி கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... மனம் பதறுகிறது... அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா! நாங்குநேரி சம்பவத்தால் ராஜ்கிரண் ஆதங்கம்
நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த திரைப்படம் மாம். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் ரிலீஸ் ஆன பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். துபாய்க்கு கல்யாண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த அவர், அங்குள்ள பாத்ரூமில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது மறைவு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் தன் படங்களின் மூலம் இன்றளவும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல தேடுதளமான கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு உள்ளது. நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் விதமாக கூகுள் வெளியிட்டுள்ள இந்த டூடுள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... உலக சாதனை படைத்த பாக்யராஜுன் '3.6.9' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!