அட்லீயின் சிஷியன் என நிரூபித்த சிபி... 2 படங்களின் தாக்கத்துடன் கூடிய ‘டான்’ எப்படி இருக்கு? - முழு விமர்சனம்
Don movie Review : சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள டான் படத்தின் விமர்சனம்.
கிராமத்துவாசியான சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் அவருக்கு மகனாக சிவகார்த்திகேயன் பிறக்கிறார். தான் ஆசைப்பட்டபடி பெண் குழந்தை பிறக்காததால் மகன் மீது வெறுப்பு காட்டும் சமுத்திரக்கனி, அவரை கண்டிப்புடன் வளர்க்கிறார்.
வெறுப்பு காட்டும் தந்தை முன் சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் கல்லூரியில் இன்ஜினியரிங் சேருகிறார் சிவகார்த்திகேயன். அங்கு பேராசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுடன் அவருக்கு மோதல் ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை கல்லூரியை விட்டு துரத்த பல்வேறு முயற்சிகளை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
எஸ்.ஜே.சூர்யாவின் சூழ்ச்சிகளைத் தாண்டி சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் படித்து முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்துக் காட்டினாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியுள்ள படம் தான் டான்.
நாயகன் சிவகார்த்திகேயன், நடனம், ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என படம் முழுக்க ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார். குறிப்பாக பள்ளி பருவ காட்சிகளுக்கும், கல்லூரி பருவ காட்சிகளுக்கும் வித்தியாசம் காட்ட உடல் எடையை குறைத்து சிறந்த நடிகராகவும் தன் திறமையை நிரூபித்துள்ளார். கல்லூரி மாணவனாக நடித்துள்ளார் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.
நாயகி பிரியங்கா மோகன், அழகு, பதுமையுடன் வந்து தனது கியூட்டான நடிப்பால் ஸ்கோர் செய்து இருக்கிறார். டூயட் பாடவும், ரொமான்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே வந்து செல்லும் வழக்கமான ஹீரோயினாகவே இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்சம் வித்தியாசம் காட்டி இருக்கலாம்.
சிவாங்கியின் நடிப்பு சற்று ஓவர் ஆக்டிங் போல் தெரிகிறது. பால சரவணன், மிர்ச்சி விஜய், மனோபாலா, காளி வெங்கட், முனீஸ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே இருந்தும் படத்தில் காமெடி ஒரு சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
கல்லூரி முதல்வராக வரும் எஸ்.ஜே.சூர்யா, தனது ஸ்டைலில் நடித்து கலக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கும், இவருக்கும் இடையேயான காட்சிகள் அருமை. அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி, கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து திறம்பட நடித்து செண்டிமெண்ட் காட்சிகளில் கைதட்டல்களை பெற்றுள்ளார்.
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, இது அவருக்கு முதல்படமாக இருந்தாலும், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கையாண்டுள்ள விதம் அருமை. கதாபாத்திர தேர்வில் கவனம் செலுத்திய இவர், திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் டான் கொண்டாடப்பட்டிருப்பான். இப்படத்தை பார்க்கும் போது நண்பன் படமும், சந்தோஷ் சுப்ரமணியம் படமும் நினைவுக்கு வந்து செல்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, தான் இயக்குனர் அட்லீயின் சிஷியன் என்பதை ஆங்காங்கே உணர வைக்கிறார் சிபி.
முதல் பாதியில் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகாதது பின்னடைவாக உள்ளது. இரண்டாம் பாதியில் குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. குறிப்பாக ஜலபுல ஜங்கு பாடல் வேறலெவல். கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. மொத்தத்தில் டான்... டாக்டர் ரேஞ்சுக்கு இல்லப்பா என்று தான் சொல்ல தோன்றுகிறது.
இதையும் படியுங்கள்... Don FDFS : கேங்காக தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த டான் படக்குழு.... வைரலாகும் டான் FDFS கிளிக்ஸ்