மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்? கூலியால் காலியான ராக்ஸ்டார்!
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள அனிருத்தின் பாடல் காப்பியடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Anirudh Coolie Movie Song Copy
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், படத்தின் கவுண்டவுன் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத்தின் இசையில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை முகம் காட்டாமல் அடையாளப்படுத்தும் வகையில் இந்த டீசர் வெளியாகி இருந்தது. மே 6ந் தேதி, இசையமைப்பாளர் அனிருத்தும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் இன்ஸ்டாகிராமில் 'கூலி'யின் புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டனர்.
அனிருத் காப்பியடித்தாரா?
"அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டும்” என்கிற கேப்ஷன் உடன் இந்த டீசர் வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த டீசர் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசருக்காக அனிருத் பயன்படுத்திய பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க ராப்பர் லில் நாஸ் எக்ஸின் 'இன்டஸ்ட்ரி பேபி' பாடலை அனிருத் காப்பியடித்ததாகக் கூறப்படுகிறது. டீசரில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின், உபேந்திரா, சத்யராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் மறைமுகமாகக் காட்டப்படுகின்றனர்.
அமெரிக்க ராப் பாடலின் காப்பி
பலர் அமெரிக்க ராப்பரை டேக் செய்து குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சமீபத்தில் வெளியான கவுண்டவுன் டீசர் ஏற்கனவே வைரலாகிவிட்டது. ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த 'கூலி' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கூலி பற்றி அனிருத் கூறியது
இதற்கிடையில், 'கூலி'யை கிட்டத்தட்ட முழுமையாகப் பார்த்ததாகவும், இது பார்க்க சிறப்பாக உள்ளது, வித்தியாசமான ஷேடில் உள்ளது என்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்த விமர்சனத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'வேட்டையன்'. இதை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜும் கடைசியாக விஜய் நடித்த 'லியோ' படத்தை இயக்கி இருந்தார்.