ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Coolie Movie Special Glimpse Released : தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் 'கூலி'. ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. 'கூலி' ரிலீசுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை அறிவிக்கும் விதமாக இந்த ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.
கூலியில் இடம்பெற்ற தளபதி சீன்
ரஜினிகாந்த், சௌபின், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோர் அடங்கிய காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இந்தப் புதிய அப்டேட் ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதி. அதுமட்டுமின்றி இந்த வீடியோவில் ரஜினியின் ஐகானிக் சீன் ஒன்றை ரீகிரியேட் செய்துள்ளனர். தளபதி படத்தில் சூரியன் பின்னணியில் இருக்கும்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டு இருக்கும். அதே காட்சி தற்போது கூலி படத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அந்தக் காட்சி இந்த கிளிம்ப்ஸ் வீடியோவிலும் இடம்பெற்று உள்ளது.
கூலியில் ரஜினி கேரக்டர் என்ன?
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள 'கூலி' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், சத்யராஜ் என பல்வேறு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கூலியில் குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே
அனிருத் ரவிச்சந்தர் கூலி படத்துக்கு இசையமைக்கிறார். கூலி படத்தில் தேவா என்கிற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


