- Home
- Cinema
- Beggar : குபேரா தனுஷுக்கு முன் தமிழ் சினிமாவில் பிச்சைக்காரனாக நடித்த ஹீரோக்கள் யார்... யார்?
Beggar : குபேரா தனுஷுக்கு முன் தமிழ் சினிமாவில் பிச்சைக்காரனாக நடித்த ஹீரோக்கள் யார்... யார்?
நடிகர் தனுஷ் குபேரா படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருந்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அதற்கு முன் அந்த ரோலில் நடித்த ஹீரோக்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tamil Cinema Actors Who Acted in Beggar Role
சினிமாவில் எந்த ரோல் கொடுத்தாலும் தயங்காமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன குபேரா படத்தில் அவரது நடிப்பை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். அப்படத்தில் பிச்சைக்காரனாக நடித்துள்ளார் தனுஷ். வேறு எந்த நடிகரும் இப்படி ஒரு ரோலை ஏற்று நடித்திருக்க மாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய 100 சதவீத உழைப்பை போட்டு நடித்திருக்கிறார் தனுஷ், இந்த படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். தனுஷுக்கு முன் இதுபோன்று பிச்சைக்காரர் வேடத்தில் நடித்த நடிகர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் என்கிற திரைப்படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய தாய் நலம்பெற வேண்டி சில நாட்கள் பிச்சைக்காரனாக வாழும் ஒரு பணக்காரனின் கதை தான் இந்த பிச்சைக்காரன். நடிகர் விஜய் ஆண்டனியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இப்படம். இதையடுத்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து அதிலும் வெற்றிகண்டார் விஜய் ஆண்டனி.
கவின்
பிச்சைக்காரனாக நடித்த மற்றொரு ஹீரோ கவின். இவர் கடந்த 2024ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிளெடி பெக்கர் என்கிற திரைப்படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வைத்து தான் புரமோட் செய்தனர். அந்த கேரக்டருக்காக பல மணிநேரம் மேக் அப் போட்டு நடித்திருந்தார் கவின். ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் கவினின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனும் பிச்சைக்காரன் ரோலில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுக்க அந்த ரோலில் நடிக்காவிட்டாலும் ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டும் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். அந்த படம் வேறெதுவுமில்லை தனுஷ் தயாரித்த காக்கி சட்டை திரைப்படத்தில் தான் பிச்சைக்காரனாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் மஃப்டி போலீஸாக இருக்கும் சிவகார்த்திகேயன், யோகிபாபு உடன் சேர்ந்து பிச்சை எடுக்கும் காட்சி ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது.
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்தின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு இயக்குனர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார். இவர்கள் கூட்டணியில் உருவான முத்து திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஜமீந்தார் ஆக இருந்து பின்னர் பிச்சைக்காரனாக மாறி இருப்பார் ரஜினிகாந்த். அந்த பிச்சைக்காரன் வேடம் படத்தில் ஒரு ஹைலைட் ஆன ஒன்றாக இருக்கும். சூப்பர்ஸ்டார் ஆக இருக்கும்போதே ரஜினிகாந்த் இதுபோன்ற ஒரு வேடத்தில் நடித்திருந்தது பெரியளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
காதல் பரத்
நடிகர் பரத் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் காதல். இப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகை சந்தியா நாயகியாக நடித்திருந்தார். இதில் சந்தியாவை உயிருக்கு உயிராக காதலிக்கும் பரத், கடைசியில் சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பால் காதலியை பிரிவார். அதுமட்டுமின்றி அவரை அடித்து மனநலம் பாதித்த மனிதனாக மாற்றி விடுவார்கள். இதனால் ரோட்டில் பிச்சை எடுத்தவாரு சுற்றித்திரிவார். அவர் கிளைமாக்ஸில் பிச்சைக்காரனாக வரும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கும்.
பிச்சைக்காரியாக நடித்த நடிகைகள்
நடிகைகள் சிலரும் பிச்சைக்காரி வேடத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகை கோவை சரளா, விஜய்யின் ஷாஜகான் திரைப்படத்தில் பிச்சைக்காரி வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதில் விவேக் உடன் சேர்ந்து அவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. குறிப்பாக கோவை சரளா அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற சிநேகிதனே பாடலை பாடி இருந்தது மிகவும் டிரெண்டானது.
இதுதவிர நடிகை பூஜாவும் பிச்சைக்காரி வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரியாக நடித்திருந்தார். இந்த ரோலில் நடித்ததற்காக நடிகை பூஜாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும், பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.