சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் நடிகர் தனுஷ் தான் நடித்த குபேரா படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.
Dhanush Watched Kuberaa FDFS With Fans : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இதுவரை 50 படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷின் 51வது படம் தான் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா, சாயாஜி ஷிண்டே, பகவதி பெருமாள், சுனைனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
குபேரா திரைப்படம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர நாகார்ஜுனா 20 கோடியும், ராஷ்மிகா மந்தனா 5 கோடியும் சம்பளமாக வாங்கி உள்ளனர். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. வெளிநாடுகளிலும் அதிகளவிலான திரையரங்குகளில் குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

ரசிகர்களுடன் குபேரா படம் பார்த்த தனுஷ்
குபேரா திரைப்படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் நடிகர் தனுஷின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், தியேட்டர் முன் மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி, கொண்டாடினர். இதையடுத்து முதல் காட்சியை காண தியேட்டருக்கு படையெடுத்து வந்த ரசிகர்கள் அதில் தனுஷின் நடிப்பை பார்த்து சிலாகித்துப் போய் உள்ளனர். இப்படத்திற்காக தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
நடிகர் தனுஷும் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் குபேரா திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டுரசித்தார். தனுஷ் உடன் அவரது மகன் லிங்காவும் வந்து படத்தை கண்டுகளித்தார். படத்திற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பை பார்த்து எமோஷனலான நடிகர் தனுஷ், கண்கலங்கினார். நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் குபேரா படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் படுவைரலாகி வருகின்றன.
