- Home
- Cinema
- Kuberaa : தக் லைஃபை விட மிக கம்மி வசூல்; குபேரா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இவ்வளவுதானா?
Kuberaa : தக் லைஃபை விட மிக கம்மி வசூல்; குபேரா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இவ்வளவுதானா?
தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் வெளியாகி இருக்கும் குபேரா திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Kuberaa Day 1 Box Office collection
நடிகர் தனுஷ் ஒரு திறமையான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் குபேரா. பான் இந்தியா படமான இதை சேகர் கம்முலா என்கிற டோலிவுட் இயக்குனர் இயக்கி உள்ளார். இவர் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் வாத்தி என்கிற படத்திற்காக இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி அமைத்து வெற்றிகண்டார் தனுஷ். குபேரா படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார்.
பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன குபேரா
குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்தின் முதல் ஷோ காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. அதைப்பார்க்க தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள், மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர். நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் குபேரா படத்தின் முதல் ஷோவை கண்டுகளித்தார்.
கலவையான விமர்சனங்களை பெறும் குபேரா
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன குபேரா திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று சறுக்கலை சந்தித்து உள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி படத்தின் நீளமும் அதற்கு ஒரு பின்னடைவாக கூறப்படுகிறது. 3 மணிநேர படம் என்பதால் அது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். என்ன தான் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் அனைவரும் தனுஷின் நடிப்பை வியந்து பாராட்டி வருகிறார்கள். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.
குபேரா படத்தின் முதல் நாள் வசூல்
தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளதால் அதன் வசூலும் பெரியளவில் இல்லை என்று தான் கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.13.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் குபேரா திரைப்படம் ரூ.3.5 கோடி வசூலித்து இருக்கிறது. உலகளவில் இப்படம் ரூ.17 கோடி வரை வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பான் இந்தியா படத்திற்கு இது ஒரு சுமாரான ஓப்பனிங் ஆகவே பார்க்கப்படுகிறது.
தக் லைஃப் வசூலை விட கம்மி
அண்மையில் வெளியாகி பிளாப் ஆன கமலின் தக் லைஃப் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.10 கோடி வசூலித்திருந்தது. ஆனால் குபேரா படம் தமிழ்நாட்டில் வெறும் ரூ.3.5 கோடி தான். தக் லைஃப் படத்தைக் காட்டிலும் குபேரா படத்துக்கு கம்மியான வசூல் கிடைத்துள்ளதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. குபேரா திரைப்படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக தனுஷ் ரூ.30 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.