4 நாட்களில் ரூ.50 கோடி வசூல்... அடுத்த டார்கெட் ரூ.100 கோடி! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாவீரன்
சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள மாவீரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த திரைப்படம் மாவீரன். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை சரிகா, இயக்குனர் மிஷ்கின், புஷ்பா பட வில்லன் சுனில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்து இருந்தார்.
வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து இருந்தார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது. வெளியான முதல்நாளே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் தந்த மவுசு... சம்பளத்தை சட்டென உயர்த்திய கீர்த்தி சுரேஷ் - அதுக்குன்னு இவ்வளவா?
maaveeran
குறிப்பாக வெளிநாட்டில் விஜய்யின் வாரிசு படத்தின் வசூல் சாதனையெல்லாம் முறியடித்து வேறலெவல் சாதனை படைத்தது. மாவீரன் திரைப்படம் மூன்று நாள் முடிவிலேயே ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், நான்காம் நாளிலும் ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்து உலகளவில் ரூ.50 கோடி வசூலை அள்ளி உள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயனும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.
மாவீரன் திரைப்படம் வார நாட்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் 2-ம் வார முடிவில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டிவிடும் என டிராக்கர்கள் கணித்துள்ளனர். இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ள நிலையில், அந்த பட்டியலில் மாவீரன் திரைப்படமும் விரைவில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தியேட்டர்களை ஆக்கிரமித்த மாவீரன்... வேறுவழியின்றி ஓடிடிக்கு சென்ற மாமன்னன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு