Lal Salaam : லால் சலாம் பிளாப் ஆனது ஏன்? புது குண்டை தூக்கிப் போட்ட விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த லால் சலாம் திரைப்படம் பிளாப் ஆனது ஏன் என்பது பற்றி நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

Lal Salaam Flop Reason
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் தோல்வி அடைந்தாலும் அதில் இடம்பெற்ற பாடல்கள் வேறலெவலில் ஹிட் ஆனது. அப்படத்தின் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தின் தோல்வியை தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா, அப்படமும் தோல்வியடைந்தது. இதன்பின்னர் 7 ஆண்டுகளாக சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த 2022-ம் ஆண்டு லால் சலாம் என்கிற திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
லால் சலாம் திரைப்படம்
லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதனால் இதில் கிரிக்கெட் விளையாட தெரிந்த நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஐஸ்வர்யா, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை நடிக்க வைத்தார். இவர்கள் தான் இப்படத்தின் நாயகர்கள் என்றும் அறிவித்திருந்தனர். பின்னர் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார். அவர் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவித்த படக்குழு, படத்தின் ரிலீஸ் சமயத்தில் முழுக்க முழுக்க ரஜினியை முதன்மைபடுத்தியே புரமோஷன் பணிகளை செய்து வந்தனர்.
பிளாப் ஆன லால் சலாம்
படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்விக்கு பின்னர் பேட்டியளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். அதில் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்துபோனதாகவும், அந்த காட்சிகள் இல்லாததால் படத்தின் ரிசல்ட் நெகடிவ் ஆக இருந்ததாக கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சால் லால் சலாம் படத்தை ஓடிடி தளங்களும் வாங்க முன் வரவில்லை. இதனால் ஓராண்டுக்கு மேலாக ஓடிடியில் ரிலீஸ் ஆகாமல் இருந்த லால் சலாம் திரைப்படம், கடந்த மாதம் தான் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அதுவும் தொலைந்துபோன ஹார்டு டிஸ்க்கில் இருந்த கூடுதல் காட்சிகளோடு லால் சலாம் ஓடிடிக்கு வந்தது.
லால் சலாம் தோல்வி பற்றி விஷ்ணு விஷால் சொன்னதென்ன?
லால் சலாம் தோல்விக்கு ஹார்டு டிஸ்க் தொலைந்தது தான் காரணம் என ஐஸ்வர்யா கூறியிருந்த நிலையில், அப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், சமீபத்திய நேர்காணலில் பேசும்போது, லால் சலாம் என்னுடைய படம் தான், ரஜினி சார் அதில் 25 நிமிடம் கேமியோ ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது மாறிவிட்டது. ரஜினி ரசிகனாக பார்த்தால் அவர் ஒரு மணிநேரம் படத்தில் வருகிறார் என்றால் அது சந்தோஷம் தான். ஆனால் அது ஒர்க் ஆகவில்லை என விஷ்ணு விஷால் கூறி உள்ளார். படத்தில் ரஜினியின் கேரக்டரை விரிவு படுத்தியது அப்படத்தின் தோல்விக்கு காரணம் என விஷ்ணு விஷால் சூசகமாக கூறி உள்ளது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.