- Home
- Cinema
- தேர்தலில் தன்னை தோற்கடித்தவரை கலாய்த்து கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் சாங் பற்றி தெரியுமா?
தேர்தலில் தன்னை தோற்கடித்தவரை கலாய்த்து கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் சாங் பற்றி தெரியுமா?
கவிஞர் கண்ணதாசன் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை தோற்கடித்த அரசியல்வாதியை கிண்டலடித்து அவர் எழுதிய பாடல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kannadasan Song Secret
கவிஞர் கண்ணதாசன் சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் ஈடுபாடுடன் இருந்து வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் திமுக-வில் இருந்த கண்ணதாசன், அங்கு தனக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால் அக்கட்சியை விட்டு விலகிவிடுகிறார். அந்த சமயத்தில் ஈவிகே சம்பத் உடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சி என்கிற அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார் கண்ணதாசன். இந்தக் கட்சி 1961-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து 1962-ம் ஆண்டு தேர்தல் வருகிறது. இந்த சட்டசபை தேர்தலில் தமிழ் தேசியக் கட்சி சார்பில், கவிஞர் கண்ணதாசன், திருக்கோஷ்டியூரில் போட்டியிடுகிறார். அந்த சமயத்தில் மிகவும் புகழ்பெற்றவராகவும் கண்ணதாசன் இருந்தார்.
தேர்தலில் தோல்வியடையும் கண்ணதாசன்
ஆனால் அந்த தேர்தலில் கவிஞர் கண்ணதாசன் தோல்வி அடைகிறார். அவருக்கு அரசியலைப் பற்றி புரிதல் இல்லாததே இந்த தோல்விக்கு காரணமாக அமைகிறது. தகுதி, திறமை என அனைத்தும் தம்மிடம் இருந்தும் தான் தோல்வியடைந்துவிட்டோமே என கண்ணதாசன் மிகுந்த சோகத்தில் இருந்திருக்கிறார். அதன் பின்னர் ஊரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வருகிறார் கண்ணதாசன். அப்போது ஏவிஎம் நிறுவனம் அன்னை என்கிற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஏவிஎம் நிறுவனத்தின் படம் என்றால் அதற்கு கண்ணதாசன் தான் பாடல் எழுதுவார். அப்படி அன்னை படத்தின் பாடலை எழுத அவருக்கு அழைப்பு வருகிறது.
கண்ணதாசனின் பாடல் ரகசியம்
அன்னை படத்திற்காக ஒரு பாடல் அவசரமாக தேவைப்படுகிறது. இதனால் அதிகாலையிலேயே கண்ணதாசனை அழைக்கிறார்கள். அன்னை படத்தில் சந்திரபாபு நடித்திருப்பார். அவரின் படங்கள் என்றாலே அதில் நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கையான ஒரு பாடல் இடம்பெறுவது வழக்கம். அப்படி ஒரு பாடலை எழுத தான் கண்ணதாசனை அழைத்திருக்கிறார்கள். வழக்கமாக சந்திரபாபு என்றாலே வேடிக்கையான பாடல்களில் தான் நடிப்பார், ஆனால் அவருக்கு ஒரு தத்துவப் பாடலை கொடுத்தால் என்ன யோசித்திருக்கிறார் கண்ணதாசன். மேலும் தான் தேர்தலில் தோற்ற சோகத்தில் இருக்கும் போது ஒரு ஊக்கம் கொடுக்கும் பாடலாக அதை எழுத முடிவு செய்கிறார்.
தோற்கடித்தவரை கலாய்த்து கண்ணதாசன் எழுதிய பாடல்
கண்ணதாசன் எழுதிக் கொடுத்த பாடல் வரிகள் மிகவும் அற்புதமாக இருக்க, இயக்குனர் முதல் இசையமைப்பாளர் சுதர்சனம் வரை அனைவரும் திருப்தி அடைகிறார்கள். இந்தப் பாடலை பாடிய சந்திரபாபுவுக்கும் இப்பாடல் மூலம் புகழ் வெளிச்சம் கிடைக்கிறது. அந்தப் பாடல் வேறெதுவுமில்லை... அன்னை படத்தில் இடம்பெற்ற ‘புத்தி உள்ள மனிதரெல்லாம்’ என்கிற பாடல் தான் அது. இப்பாடல் தன்னை தேர்தலில் தோற்கடித்த நபரை கலாய்க்கும் வண்ணம் எழுதி இருந்தார் கண்ணதாசன். “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை... வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” என்கிற வரிகளே அதற்கு சான்று. இப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.