மடக்கிய பாலசந்தர்.. சம்பவம் செய்த கண்ணதாசன்.. மேடையிலேயே பாடல் உருவான கதை
தன் படத்துக்கு பாடல் எழுதாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த கண்ணதாசனை கே.பாலசந்தர் மேடையிலே மடக்கி, பாடல் எழுத வைத்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

‘அவர்கள்’ திரைப்படம்
1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் தான் இயக்கிக் கொண்டிருந்த ‘அவர்கள்’ படத்திற்கு பாடல்கள் எழுதுவதற்காக கண்ணதாசனை அணுகியுள்ளார். கண்ணதாசன் முதல் பாடலாக ‘காற்றுக்கென்ன வேலி’, ‘இருமனம் கொண்ட’ என்ற இரண்டு பாடல்களையும் எழுதி முடித்து அதற்கு எம்.எஸ்.வி இசையும் அமைத்து முடித்து விட்டார். அடுத்த பாடலை எழுதுவதற்குள் கண்ணதாசன் பிஸியாக விட்டார்.
திட்டம் தீட்டிய கே.பாலசந்தர்
அப்போது சினிமா பத்திரிக்கை விருது வழங்கும் விழா ஒன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியிலேயே கண்ணதாசனின் பிறந்தநாளையும் கொண்டாட விழாக்குழுவினர் திட்டமிடுகின்றனர். இந்த விழாவிற்கு வரும் கண்ணதாசனை மேடையிலேயே பாடல் எழுத வைத்துவிட வேண்டும் என கே.பாலச்சந்தர் திட்டம் தீட்டுகிறார். அதற்காக கண்ணதாசன் மேடையில் வைத்து பாடல் எழுதப் போகிறார் என விளம்பரமும் செய்யப்படுகிறது.
அதிர்ச்சியில் உறைந்த கண்ணதாசன்
இந்த விவரம் எதுவும் தெரியாத கண்ணதாசன் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தருகிறார். அப்போது பாலச்சந்தர் மேடையில் வைத்து பாடல் உருவாகப் போகிற விஷயத்தை கூற, கண்ணதாசன் அதிர்ச்சியில் உறைகிறார். கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுகிறார்? எப்படி இசை அமைக்கிறார்கள்? என்பதை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். எனவே கண்ணதாசனும் மேடையிலேயே பாடல் எழுத ஒப்புக்கொள்கிறார்.
பாடலின் சூழலை சொன்ன பாலசந்தர்
கே.பாலச்சந்தர் பாடலின் சூழலைச் சொல்ல ஆரம்பிக்கிறார். சுஜாதாவின் முதல் காதல் தோல்வியில் முடிய, ரஜினியை கணவராக ஏற்கிறார். ரஜினி கொடுமைப்படுத்தவே அவரைப் பிரிந்து சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார். அங்கு கமல் சுஜாதாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ரஜினியும், மனம் திருந்தி சுஜாதாவை பார்க்க சென்னைக்கு வருகிறார். சுஜாதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மூன்று பேரும் அவரை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறார்கள்.
மேடையிலேயே பாடலை எழுதி முடித்த கண்ணதாசன்
ஒரு புறம் முன்னாள் காதலன், மற்றொரு புறம் முன்னாள் கணவன், இன்னொரு பக்கம் தன்னை மனைவி போல் கருதும் நண்பன் என தன்னுடைய எதிர்காலம் யாருடன் என்பது புரியாமல் சுஜாதா குழம்பி நிற்கிறாள். இதுதான் சுச்சுவேஷன் என பாலச்சந்தர் கூறி முடிக்க, இதற்கு எப்படி உடனடியாக பாடல் எழுத முடியும் என மக்கள் சந்தேகத்துடன் அமர்ந்திருக்க, கண்ணதாசன் உடனடியாக பல்லவியை எழுதத் துவங்ககிறார். “அங்கும், இங்கும் பாதை உண்டு. இன்று நீ எந்தப் பக்கம்? ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு, எந்த நாள் இந்த நாளோ?” என கண்ணதாசன் எழுதத் தொடங்கியதும் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.
மூன்று சரணங்களுடன் சூப்பர் ஹிட் பாடல்
பாடலுக்கு மூன்று சரணம் வேண்டுமென பாலச்சந்தர் கேட்க, அதையும் கண்ணதாசன் சளைக்காமல் எழுதி முடித்தார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.