ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்ஹாசன் - நண்பர்கள் சந்திப்பின் பின்னணி இதுதானா?
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு திடீரென சென்ற கமல்ஹாசன், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Kamalhaasan Meet Rajinikanth
நடிகர் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அபூர்வ ராகங்கள் படத்தில் தொடங்கிய இவர்களது நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இவர்களின் நட்புக்கு வயது 50. இந்த 50 வருட நட்பில் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சேர்ந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும் இவர்களின் நட்பு என்பது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. தற்போது இருவருக்குமே 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றளவும் ரஜினி, கமல் இருவருமே கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் லைன் - அப்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன் கைவசம் உள்ள படங்கள்
அதேபோல் கமல்ஹாசனும் கைவசம் நான்கு பிரம்மாண்ட படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று ஷங்கர் இயக்கும் இந்தியன் 3. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுதவிர கல்கி 2 என்கிற பான் இந்தியா திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். இதில் அவர் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் 2 படத்திலும் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கத்திலும் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்து அதிலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
ரஜினி - கமல் சந்திப்பு
இப்படி சினிமாவில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராக உள்ளார். அக்கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் எம்பி-ஆக பாராளுமன்றத்தில் அமர உள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று காலை தன்னுடைய நண்பர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். எம் பி ஆக உள்ள கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

