தமிழக மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுதவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. ஒரு வேட்பாளரை 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்பது விதியாகும். அதன்படி திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதேபோல அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்தது மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

போட்டியின்றி தேர்வாகின்றனர்

அந்தவகையில் 7 சுயேட்சை வேட்பாளர்களும் 10 எம்.எல்.ஏ-க்கள் கையொப்பம் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

ஜூன் 12ம் அறிவிப்பு வெளியாகிறது

மனுக்களை வாபஸ் பெற ஜூன் 12ம் தேதி அவகாசம் உள்ளது. அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும். அதன்படி, வருகிற 12ம் தேதி மாலை 3 மணிக்குதான் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வெற்றி சான்றிதழ் அளிக்கப்படும். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளார் என்பதுது குறிப்பிடத்தக்கது.