100 நாள் வேலைத் திட்ட நிதி குறைப்பு கிராமப்புறங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை பகுதியில் குளங்களை தூர்வாரும் பணிகள் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக ஊழல் நடைபெறுகிறது.

ஒன்றிய அரசின் நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி: 100 நாள் வேலை திட்டத்தை பாஜக அரசு கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. இது கிராமப்புறங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. இது மனசாட்சி அற்ற அணுகுமுறையாக உள்ளது. இந்த நிலை நிச்சயமாக மாற வேண்டும். மணப்பாறை பகுதியில் குளங்களை தூர்வார வேண்டி உள்ளது. இது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசியுள்ளோம். திட்டப் பணிகள் விரைவாக நடைபெறுவதில் மகிழ்ச்சி. ஆனால் ஒன்றிய அரசின் நிதி முறையாக ஒதுக்கப்படாததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினர் ஊழல்வாதிகள்

எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்கிறது. அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகமே தமிழகத்தில் தான் செயல்படுவது போல் நிலை உள்ளது. பாஜகவினர் ஊழல்வாதிகள் எனக் கூறுபவர்கள் அந்த கட்சியில் இணைந்து விட்டால் அவர்கள் புனிதர்கள் ஆகிவிடுவார்கள். அதிகமாக ஊழல் நடக்கும் கட்சியாக பாஜக தான் உள்ளது அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் அதிக ஊழல் நடக்கிறது. தமிழகத்தில் அதிக ஊழல் நடைபெறுகிறது என அமித்ஷா கூறுவது அரசியல் ரீதியான கருத்து தான்.

எந்த கட்சியும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கதுறையை அனுப்புவது அவர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டை வைப்பது அமித்ஷாவின் அரசியல் நோக்கம்தான் காரணம். இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் அந்த மாநில கட்சிகளோடு பாஜக கூட்டணி சேர்ந்து அந்த மாநில கட்சிகளை அழித்துவிட்டு தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சி அமைத்துள்ளார்கள். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து எந்த கட்சியும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. அந்தக் கட்சிகள் அழிந்து உள்ளது மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்

பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எப்படி அழிவு பாதைக்கு சென்றதோ, அதே நிலை தான் அதிமுகவிற்கும் வரும் அதை தான் அமித்ஷா கோடிட்டு காட்டியுள்ளார்.அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பார்கள். ஆனால் கூட்டணி அமைத்தால் மட்டும் திமுகவை எதிர்த்து வெற்றி பெற முடியாது அதற்கு காரணம் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. கல்வி மருத்துவம் வேலை வாய்ப்பு உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்து வசதிகளையும் திறம்பட நடத்தி வரும் திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள். இந்தியா கூட்டணியும் ஒரு வலுவான கூட்டணியாக தான் இருக்கிறோம் நிச்சயமாக இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலங்கள் உள்ளது அந்த காலத்திற்குள் இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையுமா என்பதை குறித்து தற்பொழுது கூற முடியாது. ஆனால் தற்பொழுது இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.