13 வயது சிறுமி பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சமூக நல ஆணையரகத்தில் 13 வயது சிறுமி பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக விடுதி காவலாளியை கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் 48 சதவீதம் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொள்வது அதிகரித்ததன் காரணத்தினால் பாலியல் ரீதியான புகார்கள் மற்றும் சிறு வயதிலேயே கருத்தரித்தல் சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வும் வழங்குவதற்கு துறை ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது என்று பேசியிருந்தார். அமைச்சர் கீதா ஜீவனின் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் கண்டனம்

இதுதொடர்பாக பாஜக மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமே, பதின்ம வயதில் காதல் வயப்படுவது தான் எனக் கூறியுள்ள திமுக அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் விட்டேத்தியான பேச்சு ஏற்புடையதல்ல, கடும் கண்டனத்திற்குரியது. 18 வயதிற்கு கீழேயுள்ளவர்கள் சட்டத்தின் பார்வையில் குழந்தைகள் என்ற பட்சத்தில், காதல் மொழி பேசியோ அல்லது கத்தியைக் காட்டி மிரட்டியோ அவர்களைப் பாலியல் இச்சைகளுக்கும் திருமணங்களுக்கும் உட்படுத்துவதும் சட்டப்படி குற்றம் தானே? அதை ஒரு அரசு அமைச்சர் எப்படி நியாயப்படுத்தலாம்? ஒருவேளை “முள்ளு மேல சேலை பட்டாலும், சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம் சேலைக்குத் தான்” என்ற பிற்போக்குத்தனமான பழமைவாத கருத்தை கீதா ஜீவன் அவர்கள் ஆதரிக்கிறாரா?

திமுக அரசின் நிர்வாகத் தோல்வி

தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்லி குற்றவாளி கூண்டில் ஏற்றுவது திமுக-வின் வாடிக்கை என்றாலும், அதிகாரப் பொறுப்புமிக்க ஒரு பெண் அமைச்சரும் அதே வழியை பின்பற்றுவது ஆபத்தானது. மேலும், கடந்த நான்காண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளைக் காணும் ஒன்றும் அறியா பாமர மக்கள், தங்கள் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கத் துணிவார்களா அல்லது மணமுடித்து கொடுத்து கடமையை கழித்தால் போதும் என்றத் தவறான முடிவினை எடுப்பார்களா? இது திமுக அரசின் நிர்வாகத் தோல்விதானே?

உண்மையில் அருவருக்கத்தக்கது

ஆக, தமிழகத்தில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்களை ஒடுக்கி, பெண் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தை திருமணம் செய்யத் துணியும் குற்றவாளிகள் மீதும் பாலியல் குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது திமுக அரசின் தலையாய கடமை. ஆனால் அதை விட்டுவிட்டு, அதிகரிக்கும் குழந்தை திருமணங்களும் பாலியல் குற்றங்களும் ஆளும் அரசின் தவறல்ல என்பது போல கண்டுகொள்ளாமல் கடந்து விட நினைப்பது உண்மையில் அருவருக்கத்தக்கது என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்.