எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.... இதெல்லாம் இயக்குநர் வி சேகர் இயக்கிய படங்களா?
தயாரிப்பாளரும், குடும்ப திரைப்படங்களின் இயக்குநருமான வி சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் இயக்கிய காலத்தால் அழியாத படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Director V Sekhar Movies
தமிழ்நாட்டு நடுத்தர குடும்பங்களின் மகிழ்ச்சி, சோகம், பாசம், சிக்கனம், தன்னம்பிக்கை, நகைச்சுவை உள்ளிட்டவற்றை தனது திரைப்படங்களில் பிரதிபலித்தவர் இயக்குநர் வி சேகர். திருவண்ணாமலை மாவட்டம் தெய்வானத்தம் கிராமத்தை சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான வி சேகர், சினிமாவுக்கு வரும் முன், மக்கள் நல்வாழ்வு துறையில், மலேரியா தடுப்பு அலுவலராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். அதற்கு முன்பு தனது மாமா கண்ணப்பனின் உதவியால், ஏவிஎம் ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்த சேகர், பிற்காலத்தில் தனது மாமா மகளையே திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப படங்களின் கிங் வி சேகர்
படத்தொகுப்பாளர் பி லெனின், இயக்குநர் கே பாக்கியராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். நிழல்கள் ரவி நடிப்பில் 1990-ல் சேகர் இயக்கிய நீங்களும் ஹீரோதான் படத்தில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. சேகரின் இரண்டாவது படமான நான் புடிச்ச மாப்பிள்ளை, மிகப்பெரிய வெற்றி பெற்று, தெலுங்கு, இந்தி, ஒடியா ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 1990-ல் இருந்து 2000ம் வரை ஆண்டுக்கு ஒரு படத்தையாவது இயக்கி திரைக்கு கொண்டுவந்துவிடுவார் சேகர்.
வி சேகர் இயக்கிய படங்கள்
இவர் திருவள்ளூர் கலைக்கூடம் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் கருத்தான படங்களை இயக்கி, தயாரித்து வந்தார். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும், பொறந்த வீடா புகுந்த வீடா, நான் பெத்த மகனே, எல்லாமே என் பொண்டாட்டி தான் போன்ற திரைப்படங்களில் மனைவி, மாமியாரை மையமாக வைத்து, குடும்ப ஒற்றுமையை வி சேகர் பேசி இருந்தார்.
ஒன்னா இருக்க கத்துக்கணும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற படங்களில் குடும்ப ஒற்றுமையை பிரதீபலித்த சேகர், வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்களில் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தனது திரைப்படங்களில் வேலைவாய்ப்பின்மை, மோசடி அரசியல்வாதிகள் என சமூக அவலங்களையும், நகைச்சுவை கலந்து தந்தவர் வி சேகர்.
வி சேகர் மறைவு
சேகர் இயக்கிய காலம் மாறிப்போச்சு திரைப்படத்தில் தேவா இசையில் வடிவேலு பாடி நடித்த, வாடி பொட்டபுள்ள வெளிய என்கிற பாடல், இன்றளவும் புகழ்பெற்ற பாடலாக விளங்கி வருகிறது. சரத்குமாரின் ஏய் திரைப்படத்தை தயாரித்த வி சேகர், சின்னத்திரையில் வீட்டுக்கு வீடு என்கிற சீரியலையும், சன் டிவியில் ஒளிபரப்பான பொறந்த வீடா புகுந்த வீடா என்கிற சீரியலையும் இயக்கி இருந்தார்.
வி சேகருக்கு மலர்கொடி என்கிற மகளும், கார்ல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர். கடைசியாக 2014-ம் ஆண்டு தனது மகனை வைத்து சரவணப் பொய்கை என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார் வி சேகர். கன்னடத்தில் ஒரு படம் உள்பட 18 படங்களை இயக்கி உள்ள வி சேகர், தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படத்தில் கல்வி அதிகாரியாக நடித்திருந்தார். கடந்த 2015-ல் சிலை கடத்தல் வழக்கில் கைதான வி சேகர் அதன் பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த நிலையில், நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.