- Home
- Cinema
- ஒரே ட்யூனில் ரஜினிக்கு ஒரு பாட்டு; கமலுக்கு ஒரு பாட்டு... இளையராஜாவின் மேஜிக்கால் ரெண்டுமே வேறலெவல் ஹிட்
ஒரே ட்யூனில் ரஜினிக்கு ஒரு பாட்டு; கமலுக்கு ஒரு பாட்டு... இளையராஜாவின் மேஜிக்கால் ரெண்டுமே வேறலெவல் ஹிட்
இசைஞானி இளையராஜா, ஒரே ட்யூனை பயன்படுத்தி ரஜினி மற்றும் கமல் படங்களுக்கு என இரண்டு வெவ்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

Ilaiyaraaja Same Tune Songs
இசையின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடல்களுக்கு அடிமையாகாத ஆளே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் இளையராஜா. சொல்லப்போனால் இவரின் பாடல்கள் தான் தற்போது ரிலீஸ் ஆகும் படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. அப்படி ரசிகர்கள் கொண்டாடிய இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களைப் பற்றி தான் பார்க்க உள்ளோம்.
இளையராஜாவின் ஒரே ட்யூன் பாடல்கள்
இளையராஜா அதிக படங்களுக்கு இசையமைத்த ஹீரோ என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். இவர்கள் இருவரின் படங்களும் ஹிட்டாவதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ரஜினி, கமலுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இளையராஜா, அவர்கள் இருவரின் படங்களிலும் ஒரே ட்யூனை பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறாதா. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய பாடல்கள்.
மூன்றாம் பிறை பட பாடல் ரகசியம்
அதில் ஒன்று மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்றிருந்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் இளையராஜாவின் பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றிருந்தன. இதில் கண்ணதாசன் எழுதி, யேசுதாஸ் பாடிய பூங்காற்று புதிதானது என்கிற பாடலின் இண்டர்லூடில் ஒரு ட்யூன் இடம்பெற்றிருக்கும். அந்த ட்யூனை தான் ரஜினிகாந்தின் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா. ரஜினி நடிப்பில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான தம்பிக்கு எந்த ஊரு என்கிற திரைப்படத்தில் தான் அதே ட்யூனை பயன்படுத்தி இருந்தார் இளையராஜா.
தம்பிக்கு எந்த ஊரு பட பாடல் ரகசியம்
அப்படத்தில் எஸ்.பி,பாலசுப்ரமணியம் பாடிய ‘என் வாழ்விலே’ பாடலில் தான் அதே ட்யூனை பயன்படுத்தி இருந்தார் இளையராஜா. அந்த இரண்டு பாடல்களுமே தமிழ் சினிமா ரசிகர்களால் காலம் கடந்து கொண்டாடப்படும் மாஸ்டர் பீஸ் பாடல்கள் ஆகும். இதே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற மற்றொரு சூப்பர் ஹிட் பாடலான ‘காதலின் தீபம் ஒன்று’ என்கிற பாடலின் வரிகளை கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன் படத்திலும் பயன்படுத்தி இருந்தார் இளையராஜா. இந்த இரண்டு பாடல்களுமே ஹிட் அடித்தன.