கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சியை மெய் மறந்து ரசித்து கேட்டார்.

PM Modi Enjoyed The Spiritual Performance Of Musician Ilayaraja: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று இரவு தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்துக்கு சென்றார். இதன்மூலம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை கோடி பெற்றார். தொடர்ந்து பிரதமர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி

அவருக்கு திருவாசகம் பாடி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்குள்ள பிரகிதீஸ்வரர், துர்கா, பார்வதி மற்றும் முருகன் ஆகிய சன்னதிகளில் பிரதமர் மனமுருகி வழிபட்டார். பின்பு பிரதமர் மோடி கங்கையில் கொண்டு வந்த புனித நீர் மூலம் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு பிரதமர் தீபாராதணை காட்டி வழிபாடு நடத்தினார். ஓதுவர்கள் திருவாசகம் பாட 20 நிமிடங்களுக்கும் மேலாக கோயிலில் மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்பு துர்க்கையை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு அமர்ந்து சிறிது நேரம் தியானமும் மேற்கொண்டார்.

ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியீடு

தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சோழர் கால பெருமையை விளக்கும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். சோழர் கால கல்வெட்டுகள், செப்பேடுகளின் பிரதிகள் மற்றும் சிற்பங்களை அவர் பார்த்து ரசித்தார். இதன்பிறகு ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்,முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இசைஞானி இளையராஜாவின் ஆன்மிக கச்சேரி

இந்த விழாவுக்கு முன்பாக‌ கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வளாகத்தில் இசைஞானி இளையராஜாவின் ஆன்மிக கச்சேரி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜா இசையில் வெளியான 'நான் கடவுள்' படத்தின் ஓம்சிவோகம் பாடலை பின்னணிப் பாடகர் மது கிருஷ்ணண் பாடினார். இளையராஜா நேரடியாக இசையமைத்தார். இந்த இசையை கேட்டு பிரதமர் மோடி மனமுருகி போனார். இந்த பாடல் முடிந்தவுடன் பிரதமர் எழுந்து நின்று இளையராவை பார்த்து கைதட்டி பாராட்டினார். இளையராஜா பிரதமருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

இசைஞானியின் இசையில் மெய்மறந்து போன மோடி

தொடர்ந்து திருவாசகத்தின் ''நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க..'' என்ற சிவபெருமனை போற்றும் பாடலை இளையராவை உள்ளம் உருகி பாடினார். மேலும் திருவாசகத்தில் உள்ள ''பூவார் சென்னிமன்னன்..'' என்ற பாடலை இசைஞானி இளையராஜா பாடினார். இந்த இரண்டு பாடல்களையும் மேடையில் இருந்த பிரதமர் மோடி ரசித்து கேட்டார். கைதட்டியும், தலையை அசைத்தும் பிரதமர் ரசித்தார். மேலும் இசைஞானியில் இசையால் அரங்கத்தில் இருந்த அனைவரும் உருகிப் போனார்கள். ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சி முடிந்தவுடன் தனக்கு வாய்ப்புளித்த பிரதமர் மோடிக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்தார்.