இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
இசைஞானி இளையராஜா இசைக் கருவிகளே இல்லாமல் இசையமைத்த ஒரு சூப்பர் ஹிட் பாடலைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ilaiyaraaja Song Secret
இசைஞானி இளையராஜா சினிமாவில் கோலோச்சி இருந்ததற்கு முக்கிய காரணம் அவரின் உழைப்பு மற்றும் அவருடைய புதுப் புது முயற்சிகள் தான். தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு சிரத்தை எடுத்து வேலை பார்ப்பார். இதன் காரணமாகவே அவரின் பாடல்கள் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இளையராஜா அகபெல்லா எனப்படும் இசைக்கருவிகளே இல்லாமல் வெறும் கோரஸை மட்டும் வைத்து உருவாக்கப்படும் பாடலை உருவாக்கி அசத்தி உள்ளார். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.
இளையராஜாவின் அகபெல்லா பாடல்
கேயார் இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மாயாபஜார். இதில் ராம்கி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்த இப்படத்தில் விவேக், விசு, சின்னி ஜெயந்த் என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை பஞ்சு அருணாச்சலத்தின் மனைவி மீனா தயாரித்திருந்தார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் தான் இசைக் கருவிகளே இல்லாமல் அகபெல்லா ஸ்டைலில் ஒரு பாடலை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார் இசைஞானி இளையராஜா.
இசைக்கருவிகள் இன்றி இளையராஜா உருவாக்கிய பாடல்
இசைக்கருவிகளே இல்லாமல் இளையராஜா உருவாக்கிய அந்தப்பாடல் வேறெதுவுமில்லை... மாயாபஜார் படத்தில் இடம்பெற்ற ‘நான் பொறந்து வந்தது’ என்கிற பாடலை தான் அவ்வாறு உருவாக்கி இருந்தார் ராஜா. அப்பாடலை ஜானகி பாடி இருந்தார். இப்பாடல் வரிகளை இளையராஜா தான் எழுதி இருந்தார். இப்பாடலில் லேகா, விஜி, கீதா, அனுராதா ஆகியோர் கோரஸ் பாடி இருந்தார்கள். அவர்களின் கோரஸ் குரலை தான் பின்னணிக்கு பயன்படுத்தி இருந்தார் இளையராஜா. இப்படி இசைக் கருவிகளே இல்லாமல் இளையராஜா உருவாக்கிய இந்த பாடல் அவரின் கெரியரில் ஒரு அண்டர்ரேட்டட் பாடலாகவே உள்ளது.
இளையராஜாவுக்கு முன்பே ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கிய அகபெல்லா பாடல்
இளையராஜா 1995-ம் ஆண்டு உருவாக்கிய அகபெல்லா பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 1993-ம் ஆண்டே செய்துவிட்டார். அவர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் இடம்பெற்ற ‘ராசாத்தி’ பாடலை இசைக்கருவிகளே இல்லாமல் வெறும் கோரஸை மட்டுமே வைத்து அகபெல்லா பாடலாக உருவாக்கி இருந்தார். அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. ஆனால் மாயாபஜார் படம் தோல்வி அடைந்ததால் அதில் இளையராஜா இசைக் கருவிகள் இன்றி இசையமைத்த ‘நான் பொறந்து வந்தது’ பாடல் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.