- Home
- Cinema
- இளையராஜா இசையில் வாலி எழுதிய பாடல் வரிகள்... கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்ட கதை தெரியுமா?
இளையராஜா இசையில் வாலி எழுதிய பாடல் வரிகள்... கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்ட கதை தெரியுமா?
இசைஞானி இளையராஜா இசையில் உருவான பாடல் ஒன்றிற்கு கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் கோவில் கல்வெட்டில் இடம்பெற்று இருக்கிறது.

Lyricist Vaali Song Secret
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அது கவிஞர் வாலி தான். தமிழில் அதிகப்படியான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார் வாலி. 50 ஆண்டுகாலம் தமிழ் திரையுலகில் கோலோச்சிய வாலி, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். இளையராஜா - வாலி கூட்டணியில் ஏராளமான ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அதில் கவிஞர் வாலி பெருமைகொள்ளும் பாடல் ஒன்றும் இருக்கிறது. அந்தப் பாடல் மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் அப்பாடல் வரிகளை கோவில் கல்வெட்டில் செதுக்கி இருக்கிறார்களாம். அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.
வாலியின் பேவரைட் பாடல்
அந்தப் பாடல் வேறெதுவுமில்லை. கடந்த 1992-ம் ஆண்டு வெளியான மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் தான். அப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். தன் தாய் மீதுள்ள பாசத்தை மகன் வெளிப்படுத்தும் வகையில் அப்பாடல் அமைந்திருக்கும். அந்தப் பாடலுக்கு திரையில் ரஜினிகாந்த் நடிப்பால் உயிர்கொடுத்திருப்பார். அதேபோல் அந்த பாடல் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமைய யேசுதாஸின் குரலும் ஒரு முக்கிய காரணம். இதற்கெல்லாம் முதுகெலும்பாக வாலியின் வரிகள் அமைந்திருந்தன.
கோவில் கல்வெட்டில் வாலி பாடல் வரிகள்
இப்பாடலின் வரிகள் திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கின்றன. அங்குள்ள கல்வெட்டில் அப்பாடல் வரிகள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் அருகே ஒரு ஸ்விட்ச் ஒன்றும் இருக்கிறதாம். அதை போட்டால், அந்தப் பாடலே ஒலிக்குமாம். அங்கு வருபவர்கள் அந்தப் பாடலை ஒலிக்கவிட்டு தியானம் செய்வதால் அவர்களை அப்பாடல் மெய்மறக்க செய்துவிடுமாம். அதேபோல் தாயின் நினைவுகளையும் கண்முன் கொண்டுவரும் சக்தி அந்தப் பாடலுக்கு உள்ளதாம். இதன் காரணமாகவே அங்குள்ள கல்வெட்டில் அப்பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கிறதாம்.
வாலியின் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
கவிஞர் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத பாடல் என்றால் அது அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல் தான் என சொல்வாராம். ஏனெனில் அந்தப் பாடலை தன்னுடைய தாயின் நினைவாக அவர் எழுதி இருக்கிறார். அதனால் தான் அதன் வரிகளும் மனதுக்கு நெருக்கமானதாக அமைந்திருக்கிறது. அந்தப் பாடல் கோவில் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது அவருக்கு இன்னொரு பெருமை. இதனால் வாலி எழுதிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் மன்னன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கென அவரது மனதில் ஒரு தனி இடம் உண்டு.