VTV தொடங்கி VTK வரை... சாதனைகள் நிறைந்த சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியின் சக்சஸ் ஸ்டோரி இதோ
சிம்புவும் கவுதம் மேனனும் இதுவரை இணைந்து பணியாற்றி உள்ள நான்கு படங்கள் பற்றியும், அவர்களின் சக்சஸ் ஸ்டோரி பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த இயக்குனருடன் இந்த நடிகர் சேர்ந்தால் படம் கன்பார்ம் சூப்பர் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு மிகக்குறைந்த இயக்குனர்களே இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் ஒரு செம்ம காம்போ தான் சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி. கடந்த 2010-ம் ஆண்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தொடங்கிய இந்த கூட்டணியின் பயணம் இன்று ‘வெந்து தணிந்தது காடு’ வரை வெற்றிகரமாக நீடித்து வருகிறது.
சிம்புவும் கவுதம் மேனனும் இதுவரை 4 முறை இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு முறை இணையும் போது அந்த படத்தில் ஒரு மேஜிக் உருவாகும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். சிம்பு - கவுதம் மேனன் இதுவரை இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து உள்ளார். இந்த வெற்றிக்கூட்டணியை பற்றி தற்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விண்ணைத்தாண்டி வருவாயா
சிம்புவும் கவுதம் மேனனும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 2010-ம் ஆண்டு காதலைக் கொண்டாடும் மாதமான பிப்ரவரியில் ரிலீஸ் ஆனது. ஒரு காதல் கதையை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது என எண்ணும் அளவுக்கு அவ்வளவு அற்புதமாக படமாக்கி இருந்தார் கவுதம் மேனன்.
இப்படத்தில் சிம்பு - திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி, ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்தன. காதலர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படமாக விண்ணைத்தாண்டி வருவாயா விளங்கி வருகிறது என்றால் சிம்பு - கவுதம் மேனனின் மேஜிக்கல் காம்போ தான். இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக உள்ளதாக கவுதம் மேனன் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... நான் அவன் இல்லை.. நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ரன்வீர் சிங் - இது உலகமகா நடிப்புடா சாமி
அச்சம் என்பது மடமையடா
விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி ஒரு காதல் படத்தை கொடுத்துவிட்டு, இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு வந்த குட் நியூஸ் தான் அச்சம் என்பது மடமையடா. சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் இது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முழுக்க முழுக்க காதல் படமாக எடுத்த கவுதம் மேனன், அச்சம் என்பது மடமையடா படத்தில் சற்று ரூட்டை மாற்றி காதலில் தொடங்கும் இப்படத்தை ஆக்ஷன் பக்கமும் நகர்த்தி சென்றிருந்தார். இப்படத்திலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருந்தன. அதிலும் சிம்புவும் மஞ்சிமாவும் விபத்தில் சிக்கும்போது காதலை வெளிப்படுத்தும் படியான காட்சியமைத்து கைதட்டல்களை பெற்றார் கவுதம் மேனன்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்னர் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காமல் தவித்து வந்த சிம்புவுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தாலும், விண்ணைத்தாண்டி வருவாயா அளவுக்கு இப்படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதையும் படியுங்கள்... மாநாடு பட வசூல் சாதனைகளை முறியடித்து.. பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்த வெந்து தணிந்தது காடு - முதல் நாள் வசூல் இதோ
கார்த்திக் டயல் செய்த எண் (குறும்படம்)
கொரோனா எனும் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு உலகமே முடங்கிக்கிடந்த சமயத்தில் உருவான குறும்படம் தான் கார்த்திக் டயல் செய்த எண். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இந்த குறும்படத்தை எடுத்திருந்த கவுதம் மேனன் இதனை விழிப்புணர்வு படமாக எடுத்து இருந்தார். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் காட்சிப்படுத்தி இருந்தார் கவுதம்.
இந்த குறும்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து இருந்தார். இந்த குறும்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், இது கள்ளக்காதலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.
வெந்து தணிந்தது காடு
சிம்புவும், கவுதம் மேனனும் இணைந்த நான்காவது படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களைப் போல் இருக்கும் என எதிர்பார்த்து இப்படத்தை போய் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனெனில் இப்படத்தை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் படமாக்கி உள்ளார் கவுதம் மேனன்.
ஒரு இடத்தில் கூட கவுதம் மேனனின் டிரேட் மார்க் வாய்ஸ் ஓவர் இல்லாமல், படம் முழுக்க கத்தியும், ரத்தமுமாக ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்துள்ளார் கவுதம். இதில் சிம்பு முத்துவீரன் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இது கவுதம் மேனன் படம் போல் இல்லை என விமர்சனங்கள் எழுந்தாலும், பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளார். இந்த கூட்டணி இம்முறையும் மிகப்பெரிய வெற்றியை ருசிக்க உள்ள என்பது இப்படத்தின் முதல் நாள் வசூல் மூலமே தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளனர் சிம்புவும் -கவுதம் மேனனும்.
இதையும் படியுங்கள்... சிம்புவை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? உறுதியான தகவல்..!