- Home
- Cinema
- Kuberaa : தெலுங்கில் ஹிட்; தமிழில் அட்டர் பிளாப் ஆன குபேரா! 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்ளோதானா?
Kuberaa : தெலுங்கில் ஹிட்; தமிழில் அட்டர் பிளாப் ஆன குபேரா! 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்ளோதானா?
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் 10 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Kuberaa Box Office Collection
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா, சுனைனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்து இருந்தது. சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவான குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி இருந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இது நடிகர் தனுஷின் 51வது படமாகும்.
தெலுங்கில் ஹிட் அடித்த குபேரா
குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் தெலுங்கு மாநிலங்களில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சேகர் கம்முலா தெலுங்கில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் என்பதாலும், நாகர்ஜுனா இப்படத்தில் நடித்துள்ளதாலும் இதற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதேபோல் கர்நாடகாவிலும் இப்படம் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த இரண்டு மொழிகளை தவிர மற்ற மொழிகளில் குபேரா திரைப்படம் அட்டர் பிளாப் ஆகி உள்ளது.
சேகர் கம்முலா வருத்தம்
குபேரா படத்தின் ரிசல்ட் இயக்குனர் சேகர் கம்முலாவுக்கே பேரதிர்ச்சியாக உள்ளதாம். ஏனெனில் அவர் தமிழில் இப்படம் அதிக வரவேற்பை பெறும் என நம்பினாராம். ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே உல்டாவாகிவிட்டது. படத்தின் ரிலீசுக்கு பின் அவர் அளித்த பேட்டியில், தமிழ் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து தான் படத்தில் பல அம்சங்களை வடிவமைத்ததாகவும், படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்ததால் அது தமிழ் மக்களிடம் வலுவாக இணையும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முடிவு சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார் சேகர் கம்முலா.
குபேரா படத்தின் வசூல் நிலவரம்
குபேரா திரைப்படம் நடிகர் தனுஷின் 5வது 100 கோடி படமாகும். தற்போது 10 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.123 கோடி வசூலித்து உள்ளதாம். இதில் தமிழில் வெறும் 20 கோடி மட்டுமே வசூலித்துள்ள இப்படம், தெலுங்கில் மட்டும் ரூ.60 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இதுதவிர கர்நாடகாவில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாம். மேலும் இந்தியில் வெறும் 2 கோடியும், மலையாளத்தில் 1 கோடியும் வசூலித்துள்ள குபேரா, வெளிநாடுகளில் ரூ.30 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் நஷ்டத்தை சந்தித்த குபேரா
10ம் நாள் வசூல் நிலவரத்தை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை தினமாக இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் இப்படத்திற்கு வெறும் ரூ.32 லட்சம் தான் வசூல் கிடைத்துள்ளது. அதே வேளையில் தெலுங்கில் ரூ.5 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் குபேரா திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் என்பவர் தான் ரிலீஸ் செய்திருந்தார். குபேரா படம் தமிழ்நாட்டில் 15 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது.