- Home
- Cinema
- Box Office : 100 கோடி கிளப்பில் இணைந்த குபேரா; 2025ல் வசூலில் செஞ்சுரி அடித்த தமிழ் படங்கள் ஒரு பார்வை
Box Office : 100 கோடி கிளப்பில் இணைந்த குபேரா; 2025ல் வசூலில் செஞ்சுரி அடித்த தமிழ் படங்கள் ஒரு பார்வை
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான குபேரா திரைப்படம் 100 கோடி வசூலை எட்டி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 100 கோடிக்கு மேல் வசூலித்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

100 Crore Box Office Collection Movies in 2025
2025-ம் ஆண்டு ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இப்போ தான் புத்தாண்டு தொடங்கியது போல் இருந்தது. ஆனால் அதற்குள் 6 மாதங்கள் கட கடவென ஓடிவிட்டன. இந்த ஆறு மாதம் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. 6 மாதம் ஆகியும் தமிழில் ஒரு படம் கூட 250 கோடி வசூலை தாண்டவில்லை. அதேவேளையில் மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300 கோடி, 500 கோடி என அசால்டாக அள்ளி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 100 கோடி வசூலித்த படங்களே மிகக் குறைவு தான். என்னென்ன படங்கள் பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்துள்ளன என்பதை பார்க்கலாம்.
விடாமுயற்சி
2025-ம் ஆண்டு முதன் முதலில் 100 கோடி வசூல் அள்ளிய திரைப்படம் என்றால் அது விடாமுயற்சி தான். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்திருந்தாலும், இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இப்படத்தை 250 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். இதனால் கிட்டத்தட்ட 100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டிராகன்
லவ்டுடே படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக டிராகன் இருந்தது. வெறும் 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது.
குட் பேட் அக்லி
2025ம் ஆண்டு 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை எட்டிய படங்களில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் ஒன்று. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இதில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், திரிஷா, பிரியா வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.240 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி படைத்தது.
குபேரா
100 கோடி கிளப்பில் தற்போது லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் குபேரா. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். பான் இந்தியா படமாக கடந்த ஜூன் 20ந் தேதி திரைக்கு வந்த குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆன ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூலை கூட அசால்டாக எட்டிவிடும் என கூறப்படுகிறது.