தெலுங்கில் ரீ-ரிலீசாகி திடீர் ஹிட் அடித்த 3! வசூலில் சிரஞ்சீவி படத்தையே பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய தனுஷ்
Dhanush 3 Movie : புதுப்படம் ரிலீசானால் எந்த அளவு வரவேற்பு இருக்குமே அதே அளவு வரவேற்பு தெலுங்கில் ரீ-ரிலீசான 3 படத்துக்கும் கிடைத்து வருவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தனுஷின் கெரியரில் மிகவும் முக்கியமான படம் 3. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசானது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், இது தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம். அதற்கு காரணம் இப்படத்தில் இடம்பெறும் ஒய் திஸ் கொலவெறி பாடல் தான். இப்பாடல் வெளியான ஒரே நாளில் உலகளவில் வைரல் ஹிட் ஆனது.
அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தற்போதைய ராக்ஸ்டார் இசையமைப்பாளரான அனிருத் அறிமுகமானார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் இப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை முடிவு எடுத்தது ஏன்?.. போலீஸின் முதற்கட்ட விசாரணையில் வெளியான திடுக் தகவல்
இந்நிலையில், இப்படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் டப்பிங் செய்து ரீ-ரிலீஸ் செய்தனர். அங்கு இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் 150-க்கும் மேற்பட்ட ஷோக்கள் ஹவுஸ்புல் ஆகியது. புதுப்படம் ரிலீசானால் எந்த அளவு வரவேற்பு இருக்குமே அதே அளவு வரவேற்பு ரீ-ரிலீசான 3 படத்துக்கும் கிடைத்து வருவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரீ-ரிலீசான இப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக ஐதராபாத்தில் மட்டும் இப்படம் ரீ-ரிலீசான முதல் நாளில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் வசூலித்து உள்ளது. இது தெலுங்கில் மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவியின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான கரன மொகுடு ரீ-ரிலீசானபோது குவித்த வசூலை விட அதிகமாம். தனுஷ் தற்போது தெலுங்கில் வாத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். 3 படத்தின் ரீ-ரிலீசுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அவர் நடித்து வரும் வாத்தி படத்தை மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ